44வது செஸ் ஒலிம்பியாட் : ‘தம்பி’ என்ற பெயரின் வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைப்பது என்ன ?

Chess Olympiad Thambi : சர்வதேச செஸ் உலகம் தமிழகத்தை நோக்கியிருக்கிறது. பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் தொடங்கியிருக்கிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி. அந்தப் போட்டியை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க சின்னம் பெரிதும் உதவியுள்ளது. அந்தச் சின்னத்தின் பெயர் ‘தம்பி’.    

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 29, 2022, 04:03 PM IST
  • செஸ் ஒலிம்பியாட்டை கடைக்கோடி வரை கொண்டு சென்ற ‘தம்பி’
  • சர்வதேச அளவில் பிரபலம் ஆன செஸ் ஒலிம்பியாட் சின்னம் ‘தம்பி’
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் தம்பி என்று பெயர் வைக்க வேண்டும் ?
44வது செஸ் ஒலிம்பியாட் : ‘தம்பி’ என்ற பெயரின் வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைப்பது என்ன ? title=

செஸ் ஒலிம்பியாட் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. தமிழ்நாடு அரசால் வெற்றிகரமாக இதைச் செயல்படுத்த முடியுமா என்று?. விமர்சனங்களைக் கடந்து, நேற்று பிரம்மாண்டமாக 44வது ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் முதல் உள்ளூர் போட்டியாளர்கள் வரை அத்தனைப் பேரும் தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகளை பாராட்டியுள்ளனர். 

விமான நிலையங்களில் விசா பரிசோதனை முதல் ஹோட்டல்களில் செக்-இன், சென்-அவுட் வரை அனைத்தையும் கச்சிதமாக ஏற்பாடு செய்திருப்பதாக வெளிநாட்டு செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் புகழாரம் சூட்டும் அளவுக்கு தமிழ்நாடு அரசு வேலை செய்திருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக் கூட, கலை நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளையும், வரவேற்பு நிகழ்ச்சிகளையும் பாராட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?

எந்த ஒலிம்பிக் தொடரிலும் அதற்காக பிரத்யேகமாக சின்னம் உருவாக்கப்படும். அதன்படி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னம் குதிரை வடிவத்தில் உருவாக்கப்பட்டு, பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. தலை மட்டும் குதிரை வடிவத்தில் இருந்து, மீதம் மனித உருவத்தில் வேட்டி, சட்டையுடன் ‘வணக்கம்’ சொல்லும் அந்தச் சின்னத்திற்கு ‘தம்பி’ என பெயர் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் எல்லாம் தம்பி நிற்க வைக்கப்பட்டார். 44வது செஸ் ஒலம்பியாட்டை பிரபலப்படுத்த தம்பி பெரிதும் உதவினார். 

thambi chess

இதுமட்டுமல்லாமல், தம்பிக்கு ஓர் குடும்பம் உண்டு. மனைவி, குழந்தைகளுடன் தம்பி குடும்பமாக கொடுத்த ‘போஸ்’, பலரையும் ஈர்த்தது. தமிழக பாரம்பரிய உடையில் தம்பி குடும்பம் என்ற பெயரில் வெளியான அந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இதைத் தொடர்ந்து தம்பி பிரபலமானார். 

மெரினாவுக்கு வரும் பொதுமக்கள், ‘நம்ம சென்னை’ இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தம்பியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். உலகின் கிராண்ட் மாஸ்டர்களான பிரபல செஸ் வீரர்களும் தம்பியுடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு உச்சத்திற்குச் சென்றார் தம்பி. 

கடைக்கோடி வரை சென்றுவிட்டார் தம்பி. இப்போதுதான் பலருக்கும் ஓர் கேள்வி எழுந்தன. அதென்ன தம்பி?. ஏன் இந்தப் பெயர் என்று. இதற்கான விடையை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

thambi chess

அதாவது, ‘சகோதரத்துவத்தின் அடையாளமாக செஸ் ஒலிம்பியாட் சின்னத்துக்கு 'தம்பி' என பெயர் சூட்டியிருக்கிறோம். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்பதே இதன் பொருள். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா, எல்லோரையும் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். 

மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு ‘திராவிட’ வகுப்பெடுத்த டி.ஆர்.பாலு!.

தம்பி என்ற சொல், திமுகவுக்கு வெறும் சாதாரண சொல் அல்ல. ‘தம்பி வா. தலைமையேற்க வா’ என்ற அண்ணாவின் சொற்களை இப்போதும் வெவ்வேறு தருணங்களில் திமுகவினர் நினைவுகூறுகின்றனர். திமுகவின் உணர்ச்சிப்பூர்வமான, நம்பிக்கைக்குரிய இந்த சொல்லை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சின்னத்திற்கு வைத்திருப்பது, ஒருவகையில் திராவிட அரசியலை சர்வதேச தளத்திற்கு திமுக என்னும் கட்சி, தமிழ்நாடு அரசு சார்பாக ஓர் சிப்பாயை இரண்டடி முன்னகர்த்தி வைக்கும் அரசியல் தந்திரம்!

chess thambi

தம்பி என்ற சொல் இப்போது சர்வதேச அளவில் பிரபலமானது. அந்த சொல் மூலம் திராவிட சித்தாந்தத்தின் ‘ஏதோவொன்றை’ சர்வதேச தளத்திற்கு கடத்தியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இனி, ‘தம்பி’ மெல்ல விவாதிக்கப்படுவார்.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News