அடுத்த மாதம் முதல் மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. 17வது மக்களவையை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அடுத்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.
தமிழகத்தை பொருத்த வரை மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தங்கள் கூட்டணியில் தேசிய கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஆயுத்தமாகி வருகிறது.
தொகுதி பங்கீடு, தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு என அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதனால் இன்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ திட்டம் கைவிடப்படும். மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வித்துறையை கொண்டுவர நடவடிக்கை, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், திமுக தேர்தல் அறிக்கையை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் இந்துவுக்கும் எதிரான தேர்தல் அறிக்கையை தயார் செய்து திமுக வெளியிட்டு இருக்கிறீர்கள். இதன்மூலம் எங்களுக்காக மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார் திரு.ஸ்டாலின். அவருக்கு நன்றி எனக் கூறினார்.