'கேப்டன் மில்லர் அப்பட்டமான திருட்டு... நாவலில் இருந்து கதை அப்படியே காப்பி' - அதிர்ச்சி தகவல்

Captain Miller Movie Story Theft: தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை, பிரபல தமிழ் எழுத்தாளரின் நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பதிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 20, 2024, 04:13 PM IST
  • பதிப்பாளர் வேடியப்பன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • பதிப்பாளரின் பதிவில் பல எழுத்தாளர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
  • எழுத்தாளரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
'கேப்டன் மில்லர் அப்பட்டமான திருட்டு... நாவலில் இருந்து கதை அப்படியே காப்பி' - அதிர்ச்சி தகவல் title=

Captain Miller Movie Story Theft: கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன. 10ஆம் தேதி வெளியானது. தனுஷ் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அயலான், மிஷன் 1, குண்டூர் காரம் என பல படங்களுடன் கேப்டன் மில்லர் போட்டியிட்டாலும் முதல் சில நாள்கள் நல்ல வசூலை பெற்றது. 

கேப்டன் மில்லர்: கலவையான விமர்சனம்

மேலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த பின்னர் வசூல் சற்று சுணக்கம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயலான் திரைப்படம் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கும் வகையில் இருப்பதாகவும், கேப்டன் மில்லர் திரைப்படம் அதிக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளால் நிரம்யிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 

இருப்பினும், கேப்டன் மில்லரின் கருத்தாழம் மற்றும் அத்திரைப்படம் பேசிய அரசியல் ஈடுயிணை இல்லாதது என்ற ஆதரவு குரலும் படத்திற்கு எழுந்தது. ஒடுக்கப்பட்டோர் கோயில் நுழைவு, சுதந்திர போராட்ட பின்னணி என இத்திரைப்படம் வெகுஜன சினிமாவில் நுண்ணரசியலை பக்குவமாக கையாண்டிருப்பதாகவும் விமர்சகர்கள் பலரும் பாராட்டியிருந்தனர். கோயில் கருவறைக்குள் ஒடுக்கப்பட்டோர் செல்லும் அந்த காட்சியும், அதற்கு முன் தனுஷ் பேசும் வசனமும் பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. 

மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம்? வதந்திகளுக்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா!

நாவலில் இருந்து கதை திருட்டு 

இந்த சூழலில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை பிரபல எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி பதிப்பாளர் வேடியப்பன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் சார்பில் பதிக்கப்பட்ட எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தியின் பட்டத்தை யானை நாவலில் இருந்துதான் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

வேடியப்பன் தனது பேஸ்புக் பதிவில்,"சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்புப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாகப் பேச முடிகிறது.  பார்க்க முடிகிறது. புதிய நூல்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். 

அப்பட்டமான திருட்டு

வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும். அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் அப்படியே காப்பி அடைத்து பணம் சம்பாதிக்க என்று புரிந்துகொள்வது ஆபத்தானது. சமீபத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்யமானது அல்ல. ஒரு படைப்பாளனின் படைப்பைத் திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?. 

கேப்டன் மில்லர் திரைப்படம், டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது பட்டத்து யானை நாவலின் அப்பட்டமான திருட்டு என்று எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி குற்றஞ்சாட்டி உள்ளார். படைப்பாளர்கள் குரல்கொடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 

எழும் கண்டனங்கள்

இதன்மூலம், அந்த பதிவின் கமெண்ட் பகுதியில் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எழுத்தாளர்கள் சோ. தர்மன், சரவணன் சந்திரன் ஆகியோரும் அதில் பதிவிட்டுள்ளனர். சோ. தர்மன்,"ஒட்டுத் துணிகளை பொறுக்கி, பட்டுச் சட்டைகள் தைப்பவர்கள்" என கமெண்ட் செய்துள்ளார். இவரின் 'சூல்' நாவல் 2019ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை வென்றது நினைவுக்கூரத்தக்கது. 

எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி திரைப்படங்களிலும் மற்றும் சின்ன திரை தொடரிலும் நடித்து வருகிறார். இவர் தனுஷின் தந்தையாக 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்திருப்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | இந்த இயக்குனர் கொஞ்சம் டார்ச்சர் தான்! மேடையில் போட்டுடைத்த விஜய் சேதுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News