ரூ.70 ஆயிரம் கோடி கறுப்புப்பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத்தலைவர் அரிஜித் பசாயத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கறுப்பு பணம் குறித்த குழுவின் 6வது இடைக்கால அறிக்கை ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதுவரை மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.16 ஆயிரம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
கறுப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு புலனாய்வு குழு பல பரிந்துரைகள் செய்துள்ளது. இதில், பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பல ஆலோசனைகளை ஆய்வு செய்து வருகிறது. ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் அது கணக்கில் வராத பணமாக கருதப்பட வேண்டும் என்ற எங்களது பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற எங்களின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.