எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரகப்பை பிரச்னையால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இந்த வார இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகத் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் சந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
65 வயதான அமைச்சர் ஜெட்லிக்கு, கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த திங்கள் முதல் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான், சமீபத்தில் அவர் ராஜ்ய சபா எம்.பி-யாக பதவியேற்க வேண்டிய விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஜெட்லி செய்துகொண்ட உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் இந்த பிரச்னை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என அமைச்சருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து அவருக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.