நியூட்ரினோ ஆய்வுக் கூடம் எனும் பேரழிவுத் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..
"தேனி மாவட்டம், அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் எனும் பேரழிவுத் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, ஆய்வகம் அமைப்பதற்கான கட்டுமான வேலைகளைச் செய்தது. இந்த ஆய்வகம் அமைக்கப்படுமானால் தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி பேரழிவுக்கு ஆளாகும்.
பொட்டிபுரத்தில் மலை உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்திற்கு 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரமுள்ள குகையைத் தோண்டி அதன் நடுவில் உலகிலேயே மிகப்பெரிய ஐயாயிரம் டன் எடையுள்ள காந்தமய இரும்பு உணர்விக் கருவியை (Magnetised Iron Calorimeter detector - ICAL) நிறுவ உள்ளார்கள்.
இந்த ஆய்வகத்தை நிறுவ 1000 டன் ஜெலட்டின் வெடிக் குச்சிகளை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 800 டன் பாறைகளைப் பெயர்த்து குகை அமைக்க உள்ளார்கள். இந்த ஆய்வகத்தை நிறுவ 37,000 டன் சிமெண்ட்டை பயன்படுத்தப் போகிறார்கள்.
இவ்வளவு பெரும் பரப்பில் ஏறத்தாழ 7 இலட்சத்து 50,000 கன அடி பாறையைப் பெயர்த்தெடுக்கும் அளவிற்கு வெடி வைத்துத் தகர்க்கும்போது, இம்மலையில் உள்ள நீரடுக்குப் பகுதிகள் (Aquifier) நிலைகுலைந்து நீரியல் நிலநடுக்கம் நிகழும் ஆபத்து உண்டு என்பதை பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையும், இடுக்கி அணையும் இடிந்து நொறுங்கும் அபாயம் இருக்கிறது. இத்தகைய நிலைமை ஏற்பட்டால் தென்பாண்டி மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களில் விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காது. பொதுமக்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்காது. இந்தக் காரணங்களினால்தான் தொடக்கத்திலிருந்து இத்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறோம்.
இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். 2015 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணையும் கிடைத்தது.
பூவுலக நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் அவர்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தார்.
மத்திய அரசின் தேசிய வனங்கியல் வாரியத்தின் அனுமதி இல்லாததால், பசுமைத் தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது வரவேற்கத்தக்கது நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் தந்துள்ள அனுமதியை பசுமைத் தீர்ப்பாயம் இரத்து செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும் பூவுலக நண்பர்கள் அமைப்பு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆயத்தமாக உள்ளது.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று நரேந்திர மோடி அரசு பெரிதும் முயற்சிக்கிறது. தமிழ்நாடு அரசு எக்காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்