நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். அரசியல் கட்சி துவங்கிய போதும் கட்சியின் கொள்கைகள், கொடி மற்றும் சின்னம் போன்றவற்றை தற்போது வரை அவர் அறிவிக்கவில்லை. இது அனைத்துமே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல் தேர்தல் என சொல்லும் நடிகர் விஜய் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பாக அதற்கான ஆயத்த பணிகளை ஆரம்பம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் முதல் பணியாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்து அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் துவங்கி இருக்கிறது.
மேலும் படிக்க | கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!
மாநாட்டு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கட்சியினர் கூறிவரும் நிலையில் மதுரை, திருச்சி அல்லது ஈரோடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகிய இருந்தது. அப்பகுதிகளில் சரியான இடங்கள் அமையவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது சேலத்தில் மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக நான்கு இடங்களை தேர்வு செய்து அதில் ஒரு இடத்தை இறுதிச் செய்யவும் சேலத்தில் முகாமிட்டு இருக்கிறார். கெஜல்நாயக்கன்பட்டி, தலைவாசல், செல்லியம்பாளையம் மற்றும் காக்காபாளையம் ஆகிய பகுதிகளை மாநாட்டுக்காக பார்வையிட்டு இருக்கிறார். குறிப்பாக ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய செல்லியம்பாளையத்தில் சில மாதங்களுக்கு முன்பு திமுகவின் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.
அதேபோல கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மறைந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் இங்கு கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டம் இந்த பகுதியில் தான் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தகவல்களாக சொல்லி வரும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டிருப்பது அத்தகவல்களை உறுதி செய்து இருக்கிறது. அதே வேளையில் மற்றொரு தகவலும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான சூழல் உள்ள இடங்களை பார்வையிட்டு அவை சார்ந்த தகவல்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இடம் கொண்டு செல்வார் என்றும் விஜய் சொல்லக்கூடிய இடம்தான் முதல் மாநாடு நடைபெறும் இடமாக உறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. எதுவாகினும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஒரு சில மாதங்களில் நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ