ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - வசதி படைத்தவர்களுக்கு அல்ல: நீதிமன்றம்

ஏழைகளுக்கு பரிசு வழங்கலாம். வசதி படைத்தவர்களுக்கு ஏன் பரிசு வழங்க வேண்டும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2019, 01:49 PM IST
ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - வசதி படைத்தவர்களுக்கு அல்ல: நீதிமன்றம் title=

தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால், அனைவரும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சிறப்பான பொங்கல் பரிசை அறிவித்து, வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.

ஆனால் அனைவருக்கும் பொங்கல் பரிசு என்ற அறிவிப்பை எதிர்த்து டேனியல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது. இதன்மூல தமிழக அரசுக்கு ரூ.2000 கோடி வரை செலவாகும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள அரசுக்கு, மேலும் நிதி நெருக்கடி ஏற்ப்படும். பொங்கல் பரிசு வழங்குவதை விட, இந்த நிதியை வைத்து பொது மக்களுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகளை செய்து தரலாம். எனவே பொங்கல் பரிசு வழங்குவதை தடை செய்யவேண்டும் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, அனைவருக்கும் பொங்கல் பரிசு அறிவித்தது ஏன்? தமிழகத்தில் அனைவரும் பொங்கல் கொண்டாடுகிறார்களா? சரியான கொள்கை முடிவு எடுக்காமல், ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்துகிறதா? ஏழைகளுக்கு பரிசு வழங்கலாம். அதேவேளையில் வசதி படைத்தவர்களுக்கு ஏன் பரிசு வழங்க வேண்டும்? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். 

உங்கள் கட்சி பணத்தைக் கொண்டு அனைவரும் பரிசு வழங்குங்கள் நீதிமன்றம் எதுவும் கேட்காது. ஆனால் மக்களின் வரிப்பணம் மற்றும் அரசின் பணத்தை கொண்டு வீண் செலவு செய்தால் நீதிமன்றம் நிச்சயம் தலையிடும். 

எனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக் கூடாது எனக் கூறி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

Trending News