தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர்.
கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதைத்தொடர்ந்து அவர்களை மீட்க கமாண்டோக்களை அனுப்பி வைத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உடனடி நடவடிக்கையாக மலைப் பகுதியில் இருப்பவர்களை கண்டறிவதற்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம் உள்ளூர் மக்கள் நேரத்தை வீணடிக்காமல் காயமடைந்தவர்களை தோளில் சுமந்தபடி அடிவாரத்துக்கு அழைத்து வந்தனர்.
அந்த வகையில் 15 பேர் மலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையை சேர்ந்த மோனிஷா, தனபால், விஜயலட்சுமி, சஹானா, நிவேதா, பூஜா, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, நேகா, பிரபு உள்ளிட்ட 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
99 சதவிகித தீக்காயம் அடைந்த அனுவித்யா, 40 சதவிகித காயமடைந்த கண்ணன் ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலக்கியா, சபிதா, சுவேதா ஆகியோர் தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.