சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து பதற்றத்தை கிளப்பிய நிலையில், குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain Barre Syndrome - GBS) என்னும் நரம்புகளை பாதிக்கும் நோய் தாக்குதல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிராவின் புனேவில் இது வரை 101 வழக்குகள் பதிவாகியுள்ளன. புனேவில், GBS நோயால் பாதிக்கப்பட்ட 15 நோயாளிகள் வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு புனேவின் சுகாதாரத் துறை விழிப்புடன் உள்ளது. இது ஒரு தொற்று நோய் அல்ல, ஆனால் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும். இது அரிய வகை நோய். ஆனால், புனேவில் இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குல்லியன்-பார் சிண்ட்ரோம் நோய் பரவும் விதம்
குய்லின் பாரே சிண்ட்ரோம் உடலின் நரம்புகளைத் தாக்கும் நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜிபிஎஸ் ஒரு ஆட்டோ இம்யூன் நோய். இதில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், உடலின் செல்களை தவறாக தாக்குகிறது. இதன் காரணமாக, நோயாளி பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்குகிறார், புனேவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நோய் பரவுவதற்கு வேறு ஏதாவது காரணமும் இருக்கலாம் என்று நிபுணர்கள் (Health Alert) சந்தேகிக்கின்றனர்.
நோய் பரவலுக்கும் தண்ணீருக்கும் உள்ள தொடர்பு
தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜுகல் கிஷோர் கூறுகையில், புனே நகராட்சி பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மாதிரிகளை எடுத்துள்ளது. மருத்துவமனை ஆய்வக சோதனைகளில் நோயாளிகளின் மாதிரிகளில் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. கேம்பிலோபாக்டர் ஜெஜூனி பாக்டீரியா தண்ணீரில் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா உள்ள தண்ணீரை ஒருவர் குடித்தால், இந்த பாக்டீரியா அவரது உடலில் நுழைகிறது. இந்த பாக்டீரியா வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
புனேவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இது கண்டறியப்பட்டதால், ஜிபிஎஸ் நோய்க்கு பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால், ஒருவர் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டால், ஜிபிஎஸ் பெறுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. புனேவில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்படுவதற்கு இதுவே காரணம். ஆய்வுக்குப் பிறகுதான் இந்த நோய் தண்ணீரால் பரவுகிறதா என்பது தெரியவரும்.
குய்லின் பாரே சிண்ட்ரோம் நோயின் அறிகுறிகள்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த நோய்க்கான அறிகுறி, கை, கால்களின் உணர்வின்மையுடன் தொடங்குகிறது என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இருதயவியல் துறை டாக்டர் அஜித் குமார் கூறுகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வும் ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், காய்ச்சல், திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குய்லின் பாரே சிண்ட்ரோம்
குய்லின் பாரே சிண்ட்ரோம் காரணமாக, நோயாளி பக்கவாதத்தாலும் பாதிக்கப்படலாம். இது ஏற்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது கடினம். குய்லின் பாரேசிண்ட்ரோம் உள்ள நோயாளிகளில் 22% வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் வாரத்தில் சுவாசிக்க இயந்திரம் தேவைப்படலாம். சில சந்தர்ப்பங்களில், நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது மாரடைப்பு ஆபத்து உள்ளது. இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
குய்லின் பாரே சிண்ட்ரோம் நோய்க்கு சிகிச்சை உள்ளதா?
குய்லின் பாரே சிண்ட்ரோம் நோய்க்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை செய்யப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், பிளாஸ்மா சிகிச்சை மற்றும் இம்யூனோகுளோபின் சிகிச்சையின் உதவியுடன் நோயைக் கட்டுப்படுத்தலாம். இது தொற்று நோய் அல்ல என்பதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லை, ஆனால் பாக்டீரியாவால் ஏற்பட்டால், வரும் நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குய்லின் பாரே சிண்ட்ரோம் நோய் உங்களை பாதுகாத்துக் கொள்ளும் முறை
1. ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணவும்: கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றை புறக்கணிக்காதீர்கள்
2. தொற்றுநோயைத் தவிர்க்க, காய்ச்சி ஆற வைத்த சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும்
3. தொற்று பரவும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்
4. கைகளை கழுவிய பின் உணவு உண்ணுங்கள்
5. நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | ஆண்மை பிரச்சனை முதல் மூளை ஆற்றல் வரை... வியக்க வைக்கும் அஸ்வகந்தா என்னும் மூலிகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ