கொரோனா வைரஸ் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கு விதித்துள்ள நிலையில், இந்த ஐந்து மாவட்டங்களும் (ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை) இன்று 2-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ், மருந்தகங்கள், இறுதி சடங்கு மற்றும் பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து நடவடிக்கைகளும் (இந்த நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) நிறுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ் செய்தி சேனலில் பணிபுரியும் மூத்த வீடியோ பத்திரிகையாளர் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவிட் -19 க்கு பலியானார்.
READ | உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது: EPS
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரையில் நேற்று முன்தினம் முதல் வருகிற 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. ஓட்டல்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 28ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் இல்லாத தீவிர ஊரடங்கு 2-வது முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “ட்ரோன்” காமிரா மூலம் அனைத்து தெருக்களும் கண்காணிக்கப்படுகிறது.