லோக்சபா தேர்தல் 2024
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியே முடிந்துவிட்டாலும் நாடு முழுவதும் பல கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்பது பல்வேறு தரப்பினரும் கணித்துள்ளனர். ஆனால், பிரம்மாண்ட வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் திமுக நிர்வாகிகளே உள்ளடி பிரச்சனைகள் காரணமாக முறையாக தேர்தல் வேலைகள் செய்யவில்லை என்ற புகார் கட்சி மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதனால் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சம்மபந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது - முகஸ்டாலின்!
அமைச்சரவை மாற்றம்
லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியானதும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்துவார். இந்த பணிகள் ஜூன் மாதம் இறுதி வரை இருக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே உளவுத்துறை மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் கொடுத்த ரிப்போர்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அதன்படி, அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி
விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழும்பட்சத்தில் மூத்த நிர்வாகிகளை சமானதானப்படுத்தும் வகையில் கட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறைகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிடிஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே இந்த மாற்றம் இருக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதுதவிர சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிதாக ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளதாம். வேலை செய்யாத சீனியர்கள் கல்தா கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்கப்போகிறதாம்.
திமுக கட்சிக்குள் மாற்றம்
திமுக கட்சிக்குள் செய்யப்படப்போகும் மாற்றம் தான் உற்றுநோக்கப்படும் வகையில் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம். 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் இப்போது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை சரிகட்டும் வகையிலும், வேலை செய்யாதவர்களை நீக்கிவிட்டு இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாராம். கட்சி நிர்வாகிகள் பலர் பொறுப்புகளை எதிர்பார்ப்பதால், கட்சி ரீதியில் மாவட்டங்களை அதிகப்படுத்தி திமுகவின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.
ஆட்சியை பிடிக்க இப்போதே பிளான்
இதன் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை இன்னும் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கிறது திமுக. கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு பெல்டில் திமுக மிக குறைவான இடங்களை பெற்ற நிலையில், இம்முறை இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற வகையில் கட்சியில் மாற்றங்கள் இருக்கப்போகிறதாம். ஆட்சியை இம்முறை 150க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் திமுக, அதற்கேற்ப வியூகங்களை லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் வகுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளையும் தொடங்க இருக்கிறதாம். இதனால், வரும் ஜூலையில் தமிழ்நாடு ஆட்சி நிர்வாகத்திலும், திமுக உட்கட்சியிலும் பல அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ