ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை எதிர்கொண்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், ஆளுனருமான பன்வாரிலால் புரோகித் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, புகார்களுக்குள்ளான துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்கத்துடிப்பது கண்டிக்கத்தக்கது.
திருச்சி (Tiruchirappalli) பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களுக்கு வழியனுப்பு விழா நடத்தப்பட்டு, அவர்களும் வீட்டுச் சென்றடைந்த பிறகு அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஆளுனர் ஆணையிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட இரு துணைவேந்தர்களும் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களோ அல்லது அப்பழுக்கற்ற பின்னணி கொண்டவர்களோ அல்ல. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை முறையை சிதைப்பதில் உயர்கல்வித் துறை செயலாளருக்கு துணையாக இருந்தவர். சேலம் (Selam) பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு ஆளுனர் பணி நீட்டிப்பு வழங்க ஆணையிட்டிருப்பதன் நோக்கம், அவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பதை விட, வரும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வுபெறவிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் (Annamalai University) துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்க முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வைக்க வேண்டும் என்பது தான். ஊழல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை எதிர்கொண்டு வரும் சுரப்பா, துணைவேந்தர் பதவியில் பணிக் காலத்திற்கு நீடிக்க தகுதியற்றவர் என்பது மட்டுமின்றி, எந்தவொரு துணைவேந்தருக்கும் தன்னிச்சையாக பணி நீட்டிப்பு வழங்குவதற்கான அதிகாரம் ஆளுனருக்கு இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
ALSO READ | அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும்: PMK
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் அவற்றின் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட, துணைவேந்தர்களை ஆளுனரால் தன்னிச்சையாக நியமிக்க முடியாது. அரசுத் தரப்பு பிரதிநிதி, பல்கலைக்கழகத் தரப்பு பிரதிநிதி, ஆளுனர் தரப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரைத் தான் துணைவேந்தராக நியமிக்க முடியும். அதேநேரத்தில் பதவிக்காலம் முடிவடைந்த துணைவேந்தரின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆளுனருக்கு எந்த வகையிலும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலமும் ஆளுனரால் தன்னிச்சையாக நீட்டிக்கப்படவில்லை. கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதுவும் கூட அப்போதைய திமுக (DMK) அரசின் பரிந்துரை அடிப்படையில் தான் வழங்கப்பட்டது. அதற்கே கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அதைக் கருத்தில் கொண்டு எந்த துணைவேந்தருக்கும் பணி நீட்டிப்பதை அரசும், ஆளுனரும் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அரசின் பரிந்துரை கூட இல்லாமல் இரு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதும், இன்னொரு துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க ஆளுனர் மாளிகை துடிப்பதும் நியாயப்படுத்த முடியாததாகும்.
பணியில் உள்ள துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது; புதிய துணைவேந்தர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைத் தவிர பணிநீட்டிப்புக்கு எந்த காரணத்தையும் கூற முடியாது. இதுவும் கூட நியாயமான காரணம் அல்ல. ஒரு துணைவேந்தர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக புதிய துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும். 2017-ஆம் ஆண்டில் ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், ‘‘துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்; ஒரு துணைவேந்தர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு விடுவார்’’ என வாக்குறுதி அளித்திருந்தார். அதைப் பின்பற்றாமல் துணை வேந்தர்களுக்கு ஆளுனர் தன்னிச்சையாக பணிநீட்டிப்பு வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
ALSO READ | என்.எல்.சியில் மண்ணின் மைந்தர்க்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும்: PMK
எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுனர் மாளிகை திரும்பப்பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவர் மீதான விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR