விநாயகர் சதுர்த்தி: தமிழ் கடவுள் என்று கூறப்படும் விநாயகர், முழு முதற் கடவுளாக பார்க்கப்படுகிறார். இந்த வருட விநாயகர் சதுர்த்தி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்து, அவருக்கு படைப்பதை தமிழ் நாட்டில் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இனிப்பு பலகாரங்கள் பல இருப்பினும், விநாயகருக்கு உகந்ததாக ஒரு சில இனிப்பு வகைகள் மட்டுமே கருதப்படுகின்றன. அவை என்ன? அவற்றை செய்வது எப்படி?
விநாயகருக்கு பிடித்த 4 பலகாரங்கள்:
விநாயகருக்கு எள் உருண்டை, சர்க்கரை பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம், பாசிப்பருப்பு கொழுக்கட்டை ஆகிய பலகாரங்கள் உகந்ததாக பார்க்கப்படுகிறது. இவற்றை எப்படி செய்வது?
எள் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
>வெல்லம்-ஒரு கப்
>கருப்பு எள்-ஒரு கப்
>நல்லெண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
>முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுக்கும் போது எள் வெடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
>எள் வறுபட்ட பிறகு அதை ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு அதை ஒன்றும் பாதியுமாய் மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
>அடுத்து, வெல்லத்தை துருவி எடுத்து அறைத்து வைத்திருக்கும் எள்ளுடன் சேர்த்து மீண்டும் சிறிதளவு அரைக்கவும் .
>ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்த எள்ளை சிறு சிறு உருண்டையாக பிடிக்கலாம்.
மேலும் படிக்க | உடல் எடை குறைந்து பிளாட் டம்மி வேண்டுமா? அப்போ இரவு உணவில் இதை சாப்பிடுங்கள்
சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
>பாசி பருப்பு-கால் கப்
>பச்சரிசி-1 கப்
>தண்ணீர்-4 கப்
>முந்திரி மற்றும் திராட்சி-தேவையான அளவு
>வெல்லம்-1 கப்
>ஏலக்காய்-2
செய்முறை:
>முதலில், பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து அதை கழுவி கொள்ள வேண்டும். இதை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்த பிறகு குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வைக்க வேண்டும்.
>1 கப் வெல்லத்தை அடுப்பில் வைத்து உருக்க வேண்டும். பச்சரிசி வெந்தவுடன் உருக்கிய வெள்ளைத்தை அதில் ஊற்றி மிதமான சூட்டில் கிளற வேண்டும். கிளறும் போது பச்சரிசி கட்டியாகி விடக்கூடாது.
>அதே சூட்டில் 2 ஏலக்காயை பொடி செய்து பச்சரிசியுடன் சேர்த்து கிளறவும்.
>அடுப்பில் இருந்து சர்க்கரை பொங்கலை இறக்குவதற்கு முன்னர், அல்லது இறக்கியதற்கு சில நிமிடங்களுக்கு பிறகு மூன்று ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கலக்கவும்.
பாசி பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
>பச்சரிசி-கால் கப்
>பாசி பருப்பு-ஒரு கப்
>வெல்லம்-அரை கப்
>நெய்-2 ஸ்பூன்
>முந்திரி திராட்சை-தேவையன அளவு
செய்முறை:
>முதலில் பாசி பருப்பை கடாய்யில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
>பச்சரிசியை தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.
>வெல்லத்தை அடுப்பில் வைத்து உருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
>பாசி பருப்பு வெந்ததும் பச்சரிசி போட்டு கிளறவும். இதனுடன் உருக்கிய வெல்லத்தை சேர்த்து கலக்க வேண்டும்.
>இவை, கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
>இறக்குவதற்கு முன்னர் நெய் சேர்த்து முந்திரியை வதக்கி பாயசத்தில் ஊற்றி கிளற வேண்டும்.
கொழுக்கட்டை:
தேவையான பொருட்கள்:
>தேங்காய்-ஒரு கப்
>பாசி பருப்பு-அரை கப்
>பச்சரிசி மாவு-2 கப்
>வெல்லம்-1 கப்
>ஏலக்காய் (பொடி செய்தது)-2
செய்முறை:
>முதலில் பச்சரிசி மாவை சுடு தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து கிளற வேண்டும். பிசையும் மாவு தள தளவென இருப்பது அவசியம். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
>பாசிபருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்.
>வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி உருக்க வேண்டும். வெல்லம் நன்கு உருகியதும் அதில் தேங்காய் சேர்த்து கொள்ளவும். இதனுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்த்து கொள்ளவும். இது, கொழுக்கட்டைக்குள் வைக்க வேண்டிய பூரணம் ஆகும்.
>பூரணம் கொதித்தவுடன் தட்டில் கொட்டி ஆர வைக்க வேண்டும்.
>ஊற வைத்த பச்சரிசி மாவை உருண்டைகளாக்கி அதில் அந்த பூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து பிடிக்க வேண்டும்.
>கொழுகட்டை அச்சு இருந்தால் அதையும் கொழுக்கட்டை பிடிக்க பயன்படுத்தலாம்.
>ஒவ்வொரு கொழுக்கட்டையாக பிடித்து இட்லி குக்கர் அல்லது குண்டானின் 10 நிமிடங்கள் பெரிய தீயில் வேக வைக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ