வேங்கைவயல் விவகாரம்... நடந்தது இதுதான் - தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கம்!

Vengaivayal Case: வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2025, 02:08 PM IST
  • வேங்கைவயல் சம்பவம் குறித்து 2022இல் புகார் வந்தது.
  • இதில் முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு
  • இவர்கள் மீது குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
வேங்கைவயல் விவகாரம்... நடந்தது இதுதான் - தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கம்! title=

Vengaivayal Case Latest News Updates: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன.

2022இல் வந்த புகார்

இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | வேங்கை வயல்: தலித் மக்கள் மீது குற்றச்சாட்டு... சிபிஐ விசாரிக்க திருமா கோரிக்கை - ரிலீஸான ஆடியோ, வீடியோ

இந்த புகாரின் அடிப்படையில் வெள்ளானூர் காவல் நிலையத்தில் ஜன.26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், இவ்வழக்கின் புலன் விசாரணையை 2023ஆம் ஆண்டு ஜன.14ஆம் தேதி அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார்.

சிபிசிஐடி விரிவான விசாரணை

அதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் உத்தரவின் பேரில், துணைக் காவல் கூடுதல் காவல் துறை இயக்குநர், கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடம் இருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டிஎன்ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கம்

மேலும், வேங்கைவயல் வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சில விவரங்களை உறுதி செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு

- வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதாவது 2022ஆம் ஆண்டு அக்.2ஆம் தேதி அன்று அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தில், தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு முத்தையாவை பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

- இதில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

- மேலும், இச்சம்பவம் தொடர்பான தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டது. 

- இதன் அடிப்படையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மீது கடந்த ஜன.20ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க | டங்ஸ்டன் திட்டம் ரத்து: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News