Kanchanjungha Express Train Accident, Kavach System: மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தின் ஃபன்சிதேவா பகுதியில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் மோதியதில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் (Kanchanjungha Express) ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் சுமார் 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 60 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எவ்வித பாதிப்பும் இல்லாத பெட்டிகள் அடுத்து இருந்த மால்டா நகருக்கு சம்பவ இடத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. தடம்புரண்ட பெட்டிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் அசாமில் சில்சார் முதல் கொல்கத்தாவில் உள்ள சீல்டா நோக்கி சென்றுகொண்டிருந்தது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்திருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்திருப்பவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரயில் விபத்தை தொடர்ந்து, தற்போது அதே ஜூன் மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு விபத்து நடந்துள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கவனத்திற்கு வரும் Kavach...
கடந்தாண்டு ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தபோது, ரயில்வே துறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதுபோன்ற ரயில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க அரசு தரப்பில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. அதில் முக்கிய நடவடிக்கையாக மத்திய அரசு Kavach அமைப்பை முன்வைத்தது. இருப்பினும் இதுபோன்ற ரயில் விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் இதற்கு காரணம் என்ன, Kavach அமைப்பு ஏன் வேலை செய்யவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
மேலும் படிக்க | மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து... பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்..!!
Kavach இல்லை
ஆனால், Kavach அமைப்பு இன்று ரயில் விபத்து நடந்த டார்ஜீலிங் மண்டலத்தின் ரயில்வே வழித்தடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு ஒரு லைனில் வரும் இரண்டு ரயில்களை விபத்து ஏற்படாமல் தவிர்க்க உதவும் என கூறப்பட்டது. இப்போதைக்கு இந்தியாவில் இது 1,500 கி.மீ., அளவிற்கே பொருத்தப்பட்டுள்ளது. 2022-20 ஆண்டுகளில் 2,000 கி.மீ., அளவிற்கு பொருத்தப்பட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதுமட்டுமின்றி 1 லட்சம் கி.மீ., தூரம் கொண்ட இந்திய ரயில்வே வழித்தடத்தில், இந்த Kavach அமைப்பை 34 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு பொருத்தப்பட வேண்டும் என ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வே கூறுவது என்ன?
இதுகுறித்து ரயில்வே தரப்பில் இருந்து கூறுகையில்,"அடுத்த வருடத்திற்குள் டெல்லி-கௌஹாத்தி வழித்தடத்தில் 6 ஆயிரம் கி.மீ.,க்கு Kavach அமைப்பை பொருத்த ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு பொருத்தப்படும் Kavach அமைப்பு வங்காளத்திலும் பொருத்தப்பட உள்ளது. இது டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் பொருத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. Kavach அமைப்பு இருந்திருந்தால் இன்றைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்" என்றனர்.
Kavach அமைப்பு என்றால் என்ன?
Kavach என்பது ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது ரயில்களின் வேகத்தை தானாகவே கட்டுப்படுத்தும். அதேபோன்று, ரயில் டிரைவர்கள் ஆபத்து சார்ந்த சிக்னல்களை தவிர்க்காமல் இருக்கவும், குறிப்பாக பனி மூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் அதாவது, குறைந்த தெரிவுநிலை பகுதிகளில் இயங்கும் ரயில்கள் பாதுகாப்பாக இயங்க இந்த அமைப்பு உதவும்.
ஆபத்து நேரத்தில் டிரைவர் உரிய நேரத்தில் பிரேக்கைப் பயன்படுத்தத் தவறினால், இந்த அமைப்பு தானாகவே பிரேக்கை அப்ளை செய்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக, இதில் RFID (Radio Frequency Identification) என்ற ஒரு சாதனம் தண்டவாளங்கள் மற்றும் ஸ்டேஷன் முற்றத்தில் வைக்கப்படுகின்றன. இது ரயில்வே தடங்களை அடையாளம் கண்டு ரயிலையும் அதன் திசையையும் கண்டறிவதற்கான சமிக்ஞைகளை அனுப்பும். இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டால், 5 கி.மீ.க்குள் உள்ள அனைத்து ரயில்களும், அருகில் உள்ள பாதையில் பாதுகாப்பாக செல்லும் வகையில் நிறுத்தப்படும்.
இதில் உள்ள On Board Display Of Signal Aspect (OBDSA) என்பது மோசமான வானிலை காரணமாக வழித்தடத்தில் உள்ள சிக்னல்களை பார்க்க இயலாத வகையில் தெரிவுநிலை குறைவாக இருந்தாலும் ரயில் ஓட்டுநர்களை சிக்னல்களை பார்க்க உதவும். வழக்கமாக, ரயில் ஓட்டுநர்கள் சிக்னல்களைக் கண்டறிய ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இது ரயில் எஞ்சினிலேயே தெரிந்துவிடும். இந்த Kavach சிவப்பு சிக்னலை நெருங்கும் போது ரயில் ஓட்டுநருக்கு ஒரு சிக்னலை அனுப்புகிறது மற்றும் சிக்னல் மீறப்படுவதால் விபத்தை தடுக்க தானியங்கி பிரேக்குகள் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 2022ஆம் ஆண்டில் நேரடியாக இதனை பரிசோதனை செய்தார். மேலும் இதுகுறித்து வீடியோவும் உள்ளது.
மேலும் படிக்க | கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ