உ.பி.யில் SP ஆட்சியின் போது தலித்துகள் மீதான அட்டூழியங்கள் நடந்ததே மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு இழப்பை ஏற்படுத்தின என மாயாவதி காட்டம்!!
SP மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில் கடுமையான எதிரிகளாக இருந்தன, ஆனால் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை (BJP) தடுத்து நிறுத்தும் முயற்சியில் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்திருந்தன. எவ்வாறாயினும், இறுதி முடிவில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்கள் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இது மாயாவதி கூட்டணியில் இருந்து விலக வழிவகுத்தது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வைத்திருந்த கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முதல் காரணம் மட்டுமல்ல முழுமையான காரணம் அகிலேஷ் யாதவ் தான் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவாதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; அகிலேஷ் யாதவ் யாதவர்களுக்கும் சரி, தலித் மக்களுக்கும் சரி அவர் எதுவும் செய்யவில்லை. இதனால் இரு இனத்தவர்களும் கூட்டணியை கைவிட்டு விட்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகு அகிலேஷ் யாதவ் ஒரு மறை கூட என்னை வந்து சந்திக்கவில்லை. அவரின் மோசமான அணுகு முறையே கூட்டணியை சிதைத்து விட்டது. அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலாயம் சிங்யாதவும் நம்பகத்தன்மை இல்லாதவர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்து விட்டனர். அவர்களுக்கும் BJP தலைவர்களுக்கும் ரகசிய உறவு இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வின் போது, அதிக அளவு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாதீர்கள் என்று என்னிடம் அகிலேஷ் யாதவ் கூறினார். இது ஒரு மோசமான யோசனையாக இருந்தது. அவரை நம்பி செயல் பட்டதால் நமக்கு பல இடங்களில் தோல்வி ஏற்பட்டு விட்டது. அகிலேஷ் யாதவ் எடுத்த இந்த முடிவின் பின்னணியில் பாரதிய ஜனதா இருக்கும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. மேலும், உத்தரபிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சமாஜ்வாடி ஆட்சி நடந்த போது யாதவர்கள் மட்டுமே பலன் அடைந்தனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முழுமையாக புறக்கணிக்கப்பட்டனர். இது மற்ற சமூகத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அது நமக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி சமாஜ்வாடி கட்சியுடன் நாங்கள் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.