ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான போர் முடிவடைந்து விட்டதாக ஈராக் அறிவித்துள்ளது. தலைநகர் பாக்தாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி, சிரியா - ஈராக் எல்லையின் முழுக் கட்டுப்பாடும் தற்போது தங்கள் நாட்டின் ராணுவம் வசம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஐ.எஸ் வசம் இருந்த பகுதிகளையும் ராணுவம் முழுமையாக கைப்பற்றி விட்டதாகவும், இதன் மூலம் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து விட்டதாகவும் அல் அபாதி தெரிவித்தார்.
அண்டை நாடான சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியை முழுமையாக முடித்துவிட்டதாக இரு தினங்களுக்கு முன் ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், தற்போது ஈராக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதே நேரம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வெளிநாட்டு பயங்கரவாதிகள் சிரியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அங்கிருந்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.