இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.
இதன் இடையே 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. ஈரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், போயிங் 737 ரகத்தை சேர்ந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஈரான் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஈரான், ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் பறக்க அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் அவசரகால தடை விதித்துள்ளது. இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது போல் தேவையின்றி இந்தியர்கள் ஈராக் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது