டங்ஸ்டன் சுரங்கம் வந்தால்... முதலமைச்சராக இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.  

Written by - Sudharsan G | Last Updated : Dec 9, 2024, 02:22 PM IST
  • அவை முன்னவர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
  • அனைத்து கட்சிகளும் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு
  • இதனால், பேரவையில் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கம் வந்தால்... முதலமைச்சராக இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் title=

Tamil Nadu Assembly News Updates: மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தனி தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழு தலைவர்களும் தீர்மானத்தை வரவேற்று பேசினர்.

தொடர்ந்து, பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவரான நயினார் நாகேந்திரனும் பேசினார். அதை தொடர்நது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான இந்த தீர்மானத்தை பாரதிய ஜனதா  ஆதரிக்கிறதா? எதிர்கிறதா? என்பதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் எனவும் அனைத்து பிரதிநிதிகளும் இதை வரவேற்றுள்ள நிலையில், பாஜக இதை வரவேற்கிறதா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினார்.

பாஜக மழுப்பல் பதில்

அதற்கு நயினார் நாகேந்திரன்,"மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொண்டுவரப்படாமல் இருக்கும் இந்த தீர்மானம் மீது... நாங்கள் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்" என மழுப்பலாக பேசி அமர்ந்து உடன் அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, 'அப்படி என்றால் நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாம் அல்லவா...?" என்றார்.

மேலும் படிக்க | ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட்: முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி காட்டம்

தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காராசர விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த விவகாரத்தில் திமுக, ஒன்றிய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினாலும், இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும், அப்போதே இதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திமுக எம்பிக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? நாடாளுமன்றத்தை ஏன் முடக்கவில்லை?. டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. சுரங்கம் அமைந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியபின் தான்  முதலமைச்சர் கடிதம் எழுதினார். பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியின்றி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒப்பந்தப்புள்ளி கோரிய போதே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அரசு இதில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது" என்றார்.

முதல்வர் அளித்த பதிலடி

முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,"எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல அங்கு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் மாவட்ட அமைச்சர் மூர்த்தி நேரடியாக சென்று உங்களுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் முதல்வரும் கடிதம் எழுதி இருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார். அதேபோல சட்டப்பேரவிலும் தீர்மானம் கொண்டு வருவோம் என கூறியிருந்தார். அதற்கு பின்பு தான் இந்த தீர்மானம் இங்கே வந்திருக்கிறது" என்றார்.

தமிழக சட்டசபையிலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றும் போது எதிர்க்கிறீர்கள். இருப்பினும் தீர்மானம் நிறைவேறுகிறது. அப்படிப்பட்ட தீர்மானங்களை நீங்கள் தடுத்து நிறுத்தி விட்டீர்களா? என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், பேசிய அவர்,"பெரும்பான்மையுடன் பாஜக அப்போது அறுதி பெரும்பான்மையுடன் இருந்ததால் தீர்மானம் நிறைவேறியது. எந்த நிலையிலும் தமிழக அரசு அலட்சியமாக இருந்தது கிடையாது" என்றார். அலட்சியம் என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

'திரும்ப திரும்ப சொன்ன இபிஎஸ்'

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தனி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இதை முதலிலேயே நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்னை ஆகியிருக்காது என்றே சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லி வருகிறார் இபிஎஸ் என அதிருப்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறார். புதிய மாவில் இருந்தால் போட்டு அரைக்கட்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்...

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"நான் முதல்வராக இருக்கும் வரை திட்டம் வராது நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் முதலமைச்சர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்" என உறுதிப்பட தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார். உடனே, ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்து, சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை தொடங்கும் எனவும் அறிவித்து இன்றைய அலுவல்களை நிறைவு செய்தார்.

மேலும் படிக்க | டிசம்பர் 27-ம் தேதி சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News