இந்தி கட்டாயம் என்பது நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்: தினகரன்

புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2019, 01:46 PM IST
இந்தி கட்டாயம் என்பது நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும்: தினகரன் title=

சென்னை: புதிய கல்விக் கொள்கை திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்தை ஒப்படைத்தது கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர்கள் குழு. புதிய கல்வி கொள்கை திட்டத்தை இணையதளத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலி வெளியிட்டார். 

அதில், 3 மொழி கொள்கை என்பது கட்டாயம் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு சேர்த்து இனி இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்தும் தெரிவிக்கலாம் என்று nep.edu@nic.in என்கிற மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இதுகுறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதிகள், 

"8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது

இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்."

இவ்வாறு கூறியுள்ளார்.

Trending News