புது டெல்லி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் தேதியை சனிக்கிழமையன்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது நீதிபதிகள், 2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறி, தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
அனைவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை இல்லை. 2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திமுக தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டது:
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில், நேற்று புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றாமல் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைப் பின்பற்றி இட ஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையரை பணிகளை முடித்த பின்னரே தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் புதிய மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அதன்மீது, இன்று (டிசம்பர் 11) புதன்கிழமையன்று விசாரணை நடைபெறும் என அறிவித்தது. அதேபோல இன்று புதிய மனுவை விசாரணைக்கு ஏற்றது.
ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் புதிய மனுவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், விதிகளுக்கு உட்பட்டு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, திமுக-வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிறபகுதிகளில் டிச 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு 9.12.2019 அன்று முதல் 16.12.2019 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். 17.12.2019 அன்று வேட்பு மனு மீது ஆய்வு நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19.12.2019 அன்று கடைசி நாளாகும். இருகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 2.1.2020 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முக்கிய தேதிகள்:
வேட்பு மனு தாக்கல் - 09.12.2019
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - 16.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை - 17.12.2019
வேட்பு மனுக்கள் வாபஸ் கடைசி நாள் - 19.12.2019
முதல்கட்ட தேர்தல் - 27.12.2019
இரண்டாம் கட்ட தேர்தல் - 30.12.2019
வாக்கு எண்ணிக்கை - 02.01.2020
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.