உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது மறுக்க முடியாத விஷயம்தான். ஆனால், சிலரது மரணங்கள் நம்மை நிலைகுலைய வைத்து விடுகின்றன. தனக்காக, தன் குடும்பத்துக்காக, தன் தொழிலுக்காக என்று மட்டும் வாழும் மக்களுக்கு இடையில், தன்னால் ஆன வகையில், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சமூக நலனுக்காக சிந்தித்து செயல்பட்டவர்களில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
சாகும் வரை சமூக சேவை
தனது வாழ்வின் கடைசி தருணம் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளர் விவேக் (Actor Vivek). நேற்று முன்தினம் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற அவர், தடுப்பூசி செலுத்திகொண்ட பின்னர், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செய்தியாளர் சந்திப்பு வாயிலாக மக்கள் வரை தன் கருத்துக்களை எடுத்துச் சென்றார். தடுப்பூசி தொடர்பாக மக்கள் மனதில் உள்ள அச்சம் தீர்க்க, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக், அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற பங்களிக்க வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தடுப்பூசி (Vaccine) செலுத்திக்கொண்ட பின்னர் நடிகர் விவேக் பேசுகையில், "கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்” என்று கூறினார்.
"முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும்." என்றும் நடிகர் விவேக் அப்போது விளக்கினார்.
ALSO READ: நகைச்சுவை மாமேதைக்கு வந்த மாரடைப்பு,: காரணம் என்ன? ஊகங்கள் உண்மையானதா?
சின்ன கலைவாணர் விவேக்
சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து அளித்ததால் கலைஞரால் சின்ன கலைவாணர் என பட்டம் சூட்டிக்கொண்ட பெருமைக்குரியவர் நடிகர் விவேக். அவரது நகைச்சுவை நமது மனதுக்கு இதமளித்தது. அவற்றினூடே பின்னிப்பிணைந்திருந்த சிந்தனைகள் மனதை தெளிவுபடுத்தின.
தன் நகைச்சுவையால் பின்னிப் பெடலெடுத்த விவேக்கின் பல திரைப்படங்க்களில் வந்த பல காமெடிக் காட்சிகள் என்றென்றும் நம் நினைவில் நிற்கும் வண்ணம் நசைச்சுவை அம்சத்தைக் கொண்டிருக்கும், பிரபல நடிகர்களான, ரஜினி, விஜய், அஜித், பார்த்திபன் முதல் பல இளைய தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் நடிகர் விவேக். அவரது நகைச்சுவைக்காகவே ஓடிய பல படங்களும் உள்ளன.
விழிப்புணர்வு வித்தகன் விவேக்
மக்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் விவேக்கின் நகைச்சுவையோ சிரிக்க வைப்பதோடு அனைவரையும் சிந்திக்க வைத்து, அதன் படி செயல்படவும் வைத்தது. சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது கருத்துகளை நாம் மறக்க முடியாது.
அசால்டாக ஆயிரம் அற்புதங்களை செய்த நடிகர் விவேக்கை தமிழ் திரை உலகம் (Tamil Cinema) என்றென்றும் மறக்காது. மூட நம்பிக்கைகளை மக்களுக்கு எளிய வகையில் புரிய வைத்து, தேவையற்ற சடங்குகளின் பிடியிலிருந்து சமூகத்தை கை பிடித்து அழைத்துச் சென்ற சிந்தனையாளன் அவர். ஆனால், இவ்வளவு செய்திருக்கிறாரா என அனைவரும் வியக்கும் வண்ணம் எதையும் பெரிது படுத்தாமல், சமூக வேறுபாடுகளைக் களைய சத்தமின்றி யுத்தம் செய்த எளிய மனிதன் நடிகர் விவேக்.
சிந்தனைகளை வித்திட்ட நடிகர் விவேக்
பகுத்தறிவை புகட்ட பல வகைகளை பின்பற்றிய நடிகர் விவேக், கனமான ஒரு விஷயத்தை தன் நகைச்சுவையின் உதவியோடு மக்கள் மனதில் லேசாக்கி செலுத்தினார். தான் செய்யும் பணி தனக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் என்ற ஒரே நோக்கோடு பணிபுரியும் மக்களுக்கு இடையே, தன் திரைப்பட கதாப்பாத்திரங்கள் மூலம், மூட நம்பிக்கையை மிரட்டி, அடக்குமுறையை ஒடுக்கி, சமுதாய நலனை ஊக்குவித்து, சமூக சிந்தனைகளை மக்கள் மனதில் வித்திட்டவர் நடிகர் விவேக்.
நடிகர் விவேக்கின் காமெடியால் நம் கஷ்டங்களை மறந்தோம், இனி அவரது கருத்துகளை நினைவில் கொண்டு நம் சமூகத்தை மாற்றுவோம்! அவர் செதுக்கிய சிந்தனைகளை இனி நாம் செயல்படுத்துவோம்!!
ALSO READ: Actor Vivek: நட்ட மரங்களும் வாடுகிறது… சிரிப்பு செத்துவிட்டதே!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR