மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு சிறப்பு விருதை வழங்கினார்!!
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருதை வழங்க நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 50ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து வழங்கினார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” (ICON OF GOLDEN JUBILEE) எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர்.
Shri. @rajinikanth dedicates the “Icon of Golden Jubilee of IFFI” award to all the directors, producers & crew he has had the pleasure of working throughout his illustrious career. #IFFI50 #IFFI2019 pic.twitter.com/Q48flMqayn
— IFFI 2019 (@IFFIGoa) November 20, 2019
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்; “ICON OF GOLDEN JUBILEE” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என கூறினார்.