ராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு காலம் நீடித்ததற்கு காரணமே காங்கிரஸ் தான் - அமித் ஷா குற்றச்சாட்டு!!
ஜார்க்கண்ட் : ராம்ஜன்ம பூமி வழக்கில், கடந்த 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் நீடித்து வந்ததற்கு காரணமே காங்கிரஸின் பொறுப்பின்மை தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவருமான அமித் ஷா, ராம்ஜன்ம பூமி வழக்கில், காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மையை வெகுவாக தாக்கியுள்ளார்.
அயோத்தியா விவகாரத்தில் சூமுக பேச்சு வார்த்தைகள் உதவாத நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சுமார் 40 தினங்கள் இதற்கென்று ஒதுக்கியதோடு, தினமும் சந்தித்த இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டதன் முடிவாகவே தற்போதைய தீர்வு கிடைத்துள்ளதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இஸ்லாமியர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான கபில் சிபல் இந்த வழக்கை நீட்டிப்பதிலேயே குறியாக இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அம்மாநிலத்தின் பழங்குடி மக்களுக்கென்று காங்கிரஸும், ஜார்க்கண்ட் முக்தி மோச்சாவும் இதுவரை என்ன செய்துள்ளது என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார் அமித் ஷா.