புது டெல்லி: அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டினால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறும் என்றும், அதற்காக அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என தலைமறைவாக இருக்கும் போலி சாமியாரான நித்யானந்தா வீடியோ மூலம் கூறியுள்ளார். அவ்வப்போது தனது வலைதளத்தில் காணொளியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நித்யானந்தா, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுவரை "கைலாசம்" பற்று பேசி வந்த அவர், தற்போது அயோத்தி பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.
வீடியோவில் போலி சாமியாரான நித்யானந்தா கூறியது,
சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும். ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.
நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள் என அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதை குறித்து பேசியுள்ளார்.
முன்னதாக அகமதாபாத்தில் கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் நித்யானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், அவரால் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படும் கைலாசா.ஆர்ஜ் (Kailaasa.org) என்ற வலைத்தளத்தில், தனிநாடு குறித்து விளக்கம் அளித்தார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா "கைலாசா" என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவர் தனது சொந்த நாட்டை "மிகப் பெரிய இந்து இறையாண்மை கொண்ட நாடு" எனவும், அதற்கு என சொந்தக் கொடி, அரசியலமைப்பு, சின்னம் மற்றும் சொந்த பாஸ்போர்ட் இருக்கும் எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைப்பிடிக்கும் உரிமையை இழந்தனர் என நித்யானந்தாவின் வலைதளத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் கைலாசாவின் குடியுரிமைக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அவர்களின் வலைதளத்தில் கொள்கை பற்றியும் கூறியுள்ளது. அதாவது அடிப்படையில் "கைலாசா" நாடு பாலின சமத்துவம், புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டம், முழுமையான கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உலகளாவிய அணுகல், சைவ உணவு போன்ற காரணங்களை ஆதரிக்கிறது. கைலாசா ஆன்மீக, மத, சமூக, கலாச்சார, வரலாற்று, பொருளாதார மற்றும் அரசியல் சட்டபூர்வமான தன்மையை சனாதன இந்து தர்மத்தின் வழியில் பயணிக்கும். அதனால் அது மனிதகுலம் அனைவருக்கும் பயனளிக்கும்" என்று கைலாசா குறிப்பிட்டுள்ளது.
நித்யானந்தாவின் தனிநாடு குறித்து விளக்கம் அளித்த ஈக்வேடார் நாடு, "நித்யானந்தாவுக்கு புகலிடம் வழங்கிய செய்தி உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. தனது நாட்டில் எந்தவொரு நிலத்தையும் அல்லது எந்த தீவையும் வாங்குவதற்கு நாங்கள் நித்யானந்தாவுக்கு உதவவில்லை. அவர் ஈக்வேடாரில் தஞ்சம் அடையவில்லை என்று ஈக்வேடார் அரசு விளக்கம் அளித்திருந்தது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.