தமிழக மசூதிகளில் சட்டவிரோத இயங்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அப்துல் ரகுமான் என்ற வெளிநாடு வாழ் இந்தியர், சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியா கவுன்சிலில் திருமண விவகாரங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட தம்பதிக்கு விவகாரத்து அளிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீது இன்று (திங்கட்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர் சிராஜுதீன், ஷரியா நீதிமன்றங்களால் ஏராளமான இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வாதாடினார். இஸ்லாமிய மதத்தின் கொள்கைப்படி நடத்தப்படுவதாக சித்தரிக்கப்படுவதாகவும் தனது விருப்பமின்றியே தன் மனைவிக்கு இந்நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்துக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பு வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மத அடிப்படையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறியதுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஷரியா நீதிமன்றங்களுக்கு தடைவிதிப்பதாக உத்தரவிட்டது. மேலும், இது பற்றி கண்காணிப்பு நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
(With PTI inputs)