வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் மீண்டும் சோதனை!!

சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறையின் நேற்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளது.

Last Updated : Dec 28, 2017, 12:13 PM IST
வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் மீண்டும் சோதனை!! title=

சசிகலா உறவினர்கள் வீடு, நிறுவனங்கள் என 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இளவரசி மருமகன் கார்த்திகேயன் வீடு, நிறுவனங்கள், மிடாஸ் மதுபான தொழிற்சாலை என தமிழகம் முழுவதும் 6 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையார் கற்பகம் கார்டனில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனின் இல்லத்துக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் 6 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இரவு வரை நீடித்தது.

சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியாவின் கணவரான கார்த்திகேயன், மிடாஸ் மதுபான ஆலை நிர்வாகிகளில் ஒருவர் ஆவார். 

மிடாஸ் நிறுவனத்துக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதனின் வீடு அதே பகுதியில் உள்ளது. கார்த்திகேயனின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கும் போது 3 அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், சசிகலாவின் நெருங்கிய உறவினர். இவர் கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள மயிலேறிபாளையத்தில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். மேலும், மிடாஸ் மதுபான ஆலைக்கு தேவையான காலிபாட்டில்களை இவர் சப்ளை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சம்மந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமும் அளித்திருந்தனர். அப்போது பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் தேவைப்பட்டால் மீண்டும் சோதனை நடத்தப்படும் என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், சசிகலா உறவினர்கள் வீடுகளில் 2வது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது.

மாலை வரை நீடித்த இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

Trending News