Heavy Rain In Madurai: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த ஓரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாத பொதுமக்கள் தற்போது பெய்து வரும் மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் மதிய வேளையில் கரு மேகங்கள் வானில் திரண்டு மழையாக பொழிந்தது. வெளுத்து வாங்கிய இந்த கனமழையால் மதுரை மாட்டுத்தாவணி அண்ணாநகர் காமராஜர் சாலை கீழவாசல் பெரியார் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இதனால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர்.
மதுரையில் தொடரும் கனமழை
எந்த ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாத மதுரை மாவட்ட நிர்வாகத்தினால், ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே மதுரை தாங்கவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு மழை நீர் வெளியே செல்ல முடியாமல் சாலையில் தேங்கிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் படிக்க | “ஓசி பரோட்டா வேணும்” அரிவாளுடன் ரவுடி அட்டூழியம்! சிசிடிவியால் அதிர்ச்சி!
மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இங்கு மழையின் அளவை சென்டிமீட்டரில் காணலாம். உசிலம்பட்டி 6 செ.மீ., மேட்டுப்பட்டி 5 செ.மீ., கல்லந்திரி 5 செ.மீ., புலிப்பட்டி 4 செ.மீ., குப்பணம்பட்டி 3 செ.மீ., பெரியபட்டி 3 செ.மீ., திருமங்கலம் 2 செ.மீ., கல்லிக்குடி 2 செ.மீ., சிட்டம்பட்டி 2 செ.மீ., மதுரை நகரம் 1 செ.மீ., மதுரை வடக்கு 1 செ.மீ., தல்லாகுளம் 1 செ.மீ., மேலூர் 1 செ.மீ., அளவிற்கு மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சாலையில் நீர் தேங்க காரணம்
மேலும் மதுரை மட்டுமின்றி தேனி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்ததால், வைகை அணையில் இருந்து 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகர் வழியாக ஓடும் வைகை ஆற்றில் நீர் அதிகரித்துள்ளதால், நகர் பகுதியில் பெய்யும் மழைநீர் வடிவதற்கு நீண்ட நேரம் எடுப்பதாகவும், அதனால்தான் சாலையில் மழைநீர் தேங்குவதாகவும் கூறப்படுகிறது.
தண்ணீரில் சிக்கிய 5 பேர்
குறிப்பாக, மதுரை ராஜா மில் ரோடு கருடர் பாலம் வழியாக சென்ற இன்னிசை கச்சேரி குழுவினர் மதுரை மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் அவ்வழியாக சென்ற போது அங்கே தேங்கிருந்த தண்ணீரில் மாட்டிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மழை நீரில் சிக்கிக் கொண்ட அந்த வாகனத்தை கயிற்றால் கட்டி இழுத்தனர். மழை நீரில் சிக்கிக் கொண்ட அந்த ஐந்து பேரை மீட்டனர். அந்த வாகனத்தின் ஓட்டுனர் நாகேந்திரன், அப்துல்லா, மாரியப்பன், அம்பிகா மற்றும் விக்னேஷ் ஆகியோரை அவர்கள் மீட்டனர்.
மழை தொடரும்...
தொடர்ந்து தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மே 12ஆம் தேதியான நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், மே 13ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 14ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மதுரை மற்றும் தேனியில் அடுத்தடுத்து கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ஆற்றில் நீரின் வரத்து அதிகரிக்கும் என தெரிகிறது. எனவே, சாலைகளில் நீர் தேங்கும் பிரச்னை மக்களுக்கு சிரமத்தை அளிக்கலாம். தற்போது வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்களின் வெள்ள அபாய எச்சரிக்கையை வழங்கி வருகின்றன.
மேலும் படிக்க | விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்... 'ஒத்துழைக்காத காவல்துறை' - பொங்கிய பிரேமலதா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ