4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெறும்: ஸ்டாலின்

"நிச்சயம், 4 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெறும்" என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2019, 06:43 PM IST
4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெறும்: ஸ்டாலின் title=

திருப்பரங்குன்றம்: கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இந்த மாதம் மே 19 ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 18 ஆம் தேதி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களவை தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. வேலூர் தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற இருக்கின்றன. அதாவது மொத்தம் 22 சட்டசபை தொகுதி என ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. 4 தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மொத்தம் 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர்.

அந்த வகையில், திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்பொழுது சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் வாகனத்தில் நின்றப்படி மக்களிடம் பேசினார். 

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நிச்சயம், 4 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெறும்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

Trending News