சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் இயல், குவெம்பு, சாகித்ய அகாதெமி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற புனைகதையாளர் இமையம் படைப்புகளைப் பற்றிய ஒரு நாள் தேசியக் கருத்தரங்கத்தில், எழுத்தாளர் இமையம் 'கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரர்' என எழுத்தாளர் அரவிந்தன் முன் வைத்து உரையாடினார்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் இயல், குவெம்பு, சாகித்ய அகாதெமி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற புனைகதையாளர் இமையம் படைப்புகளைப் பற்றிய ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நேற்று (14.02.2023) நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியர், துறைத் தலைவர் முனைவர் கோ.பழனி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்கம் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்து, இமையத்தை மொழிபெயர்த்தல் என்னும் தலைப்பில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், இமையத்தின் எழுத்துவெளி நகர்வுகள் என்னும் தலைப்பில் கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி புலமுதன்மையர் (இணை)பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் ஆய்வுரைகளை வழங்கினார்கள்.
மேலும் படிக்க: தோழிகளின் தின்பண்டங்கள்: இயற்கையோடு பயணிக்க வைக்கும் அந்த மூன்று தோழிகள்!
நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் பத்திரிகையாளர், எழுத்தாளர் அரவிந்தன். 'கூடுவிட்டுக் கூடுபாயும் இலக்கிய வித்தைக்காரர்' என்னும் தலைப்பில் 'இமையத்தின் படைப்புகளான ஆலடி பஸ், நன்மாறன் கோட்டை, ஈசனருள் ஆகிய மூன்று சிறுகதைகள், இப்போது உயிருடன் இருக்கிறேன், செல்லாத பணம் ஆகிய இரண்டு புதினங்களை மையமாகக் கொண்டு ஆய்வுரையை நிகழ்த்தினார். கூடுவிட்டுக் கூடும் பாய்வது என்பது எழுத்தின் சாகசம் அல்ல; கலையுணர்வின் வெளிப்பாடு என்றும் இமையம் படைப்புகளில் தன்னிலைச் சாராத புறவழி அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கொண்டவையாக உள்ளன என்றும் பதிவு செய்தார். இமையத்தின் கதைகளில் கதைமாந்தரே கதைசொல்லியாக உள்ளனர். எந்த இடத்திலும் இமையத்தின் குரல் ஒலிக்காதது அவரது கலை வெற்றியாக உள்ளது என்றார். மேலும், கதைமாந்தரின் வலி, வேதனை, பரிதவிப்பு, ஆற்றாமை, குரோதம், அச்சம், பதைபதைப்பு ஆகியவற்றை வாசகர்கள் தன்னுடைய அனுபவமாக உணரச் செய்யும் சித்தரிப்பு இமையத்தின் எழுத்துகளாக உள்ளன' என்று கூறினார்.
பிற்பகல் அமர்வில், மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறை பேராசிரியர் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம், 'இமையத்தின் உள்ளுர் என்னும் தலைப்பில் உள்ளூர் என்பதற்கான விளக்கத்தையும் அது குறித்த பார்வையையும் முன் வைத்து உரையாடினார். ஊர் என்றால் எல்லோரும் கலந்து வாழ்கின்ற இடம். தமிழிலக்கியத்தில் குறிப்பிட்ட தெருவை மட்டும் மையப்படுத்தி ஊராகக் காட்சிப்படுத்தும் மாயை இருக்கிறது. ஆனால், இமையம் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் காட்சிப்படுத்தவில்லை. தன்னுடைய படைப்புகளில் ஊரின் எதார்த்ததில் என்ன உள்ளதோ அதனைப் புனைவில் காட்சிப்படுத்துபவராக உள்ளார். இமையத்தின் படைப்புகளைப் பண்பாட்டுவியல் நோக்கில் அணுகுவதற்கு முன்பு இமையத்தின் படைப்பை படைப்பாகப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்பே அப்படைப்பின் மீதான பார்வையைச் செலுத்த வேண்டும் என்றார். மேலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இருவரையும் நேரடியாகக் காட்சிப்படுத்துகிறார். சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாபவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக அது ஒடுக்குகிறவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பதிவு செய்தார். ஒடுக்கிறவர்களின் பார்வையில் சாதியைப் எப்படிப் புரிந்துகொள்வது என்றும் அவர்களுக்கான மனச்சிக்கல் என்ன? அவர்களின் மனநிலைமை என்ன? என்னும் பார்வையில் இமையம் படைப்புகள் உள்ளன' என்றார்.
மேலும் படிக்க: நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய தமிழாக்க நூல் வெளியீடு
தொடர்ந்து, காலத்தை ஆவணப்படுத்தும் கலைஞன் என்னும் தலைப்பில் தாம்பரம் கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ. சுடர்விழி, இமையத்தின் எழுத்துகளும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் என்னும் தலைப்பில் கோவிந்தப்பேரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அருள் செலஸ்டீன் பிரேமா ஆகியோர் ஆய்வுரைகளை வழங்கினார்கள். பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கில் முற்பகல் 10.30க்கு தொடங்கி பிற்பகல் 06.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலக் கல்லூரி முதல்வர், எழுத்தாளர் முனைவர் கல்யாணராமன், சென்னைப் பல்கலைக்கழக உயராய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், இளம் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ. ஏகாம்பரம் நன்றியுரை தெரிவித்தார்.
மேலும் படிக்க: ’முட்டுக்கட்டை போடாதீர்கள்’ பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ