மக்களவையில் இன்று திமுக எம்பி தயாநிதிமாறன் பேசுகையில் தமிழக அரசை ஊழல் அரசு என விமர்சனம் செய்ததற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் மிக மோசமான ஊழல் அரசு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் திட்டங்களை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தியிருந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்க வாய்ப்பிலை என்றும், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்களின் எந்த பிரச்சனையையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார்.
Dayanidhi Maran: ... then Karunanidhi decided to set up a desalination unit & UPA govt sanctioned 1000 crores for a desalination plant to be implemented in Chennai. But central's ally AIADMK is complacent. Yesterday MK Stalin was protesting for the people. (2/2) https://t.co/XHU53G2I8Z
— ANI (@ANI) June 25, 2019
தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். கூட்டணி கட்சியான அதிமுக தலைமையிலான அரசை தயாநிதி மாறன் விமர்சனம் செய்ததால், அதிமுக-வுக்கு ஆதரவாக பாஜக எம்பி-க்கள் முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்தில், சம்பந்தம் இல்லாமல் தயாநிதி மாறன் பேசுவதாக ராஜீவ் பிரதாப் ரூடி குற்றம்சாட்டினார். இதனால் மக்களவையில் சற்று நேரம் அமளி ஏற்பட்டது.
பின்னர் அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தினார். அதன்பின்னர் தயாநிதி மாறன் தனது உரையை தொடர்ந்தார். அப்போது தண்ணீர் பிரச்சனை முக்கியமான பிரச்சனை என்றும், அதனை தீர்க்க அரசு நடவடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்ததாகவும், அத்திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது என்றும் தயாநிதி மாறன் மக்களவையில் குறிப்பிட்டார்.