இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. சிறிய மைதானம் என்பதால் எவ்வளவு அடித்தாலும் சேஸிங் செய்துவிடலாம் என நினைத்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், டாஸ் ஜெயித்தவுடன் பந்துவீச்சை உஷாராக தேர்வு செய்துவிட்டார். அங்கேயே தவானுக்கு சிறிய சறுக்கல் தான். இருந்தாலும் நல்ல ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்யணித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தவான் படை களமிறங்கியது.
ஓப்பனிங் இந்தியாவுக்கு நல்லா தான் இருந்தது. ஆனால் பினிஷிங் சரியில்லை. பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி. முதல் விக்கெட்டுக்கு தவானும், கில்லும் 124 ரன்கள் எடுத்தனர். 50 ரன்கள் அடித்த கில் அப்போது அவுட்டானார். உடனே மறுமுனையில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த தவானும் இதோ நானும் வருகிறேன் என 72 ரன்கள் அடித்துவிட்டு நடையைக் கட்டினார். நன்றாக ஆடிய இருவரும் வெளியேறிவிட்டதால் மிடில் ஆர்டர் மேல் பிரஷர் விழுந்தது.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? சோக கதை மூலம் ஷிகர் தவான் விளக்கம்
விராட் கோலி இடத்தில் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தன் பங்குக்கு 80 ரன்கள் எடுக்க, பன்ட் வழக்கம்போல் சொதப்பினார். அவர் 15 ரன்களுக்கும், நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கும் வெளியேற, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களம் புகுந்தார் சஞ்சு சாம்சன். கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பொறுமையாக ஆடிய சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க இறுதியில் அதிரடி காட்டினார் வாஷிங்டன். அவர் 16 பந்துகளில் 36 ரன்கள் குவிக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 306 ரன்கள் எடுத்தது.
20 ஓவர் தொடரில் வாங்கிய அடி போதும், ஒருநாள் போட்டியில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் களம் புகுந்தனர். கான்வே, பின் ஆலன் ஆகியோர் 20 ரன்களுக்கு மேல் எடுத்து அவுட்டாக, வில்லியம்சனும், டாம் லாதமும் கூட்டணி அமைத்து நங்கூரம் போல் நிலைத்து நின்றுவிட்டனர். இவர்களின் விக்கெட்டை எடுக்க குட்டிக்கரணம் போட்டுப்பார்த்தும் இந்திய பந்துவீச்சாளர்களால் முடியவே இல்லை. தவானும் தன்னால் இயன்ற அத்தனை அஸ்திரத்தையும் அவர்கள் மீது வீசினார். ஆனால், வில்லியம்சனும், லாதமும் அடி வெளுத்து வாங்குவதிலேயே குறியாக இருந்துவிட்டனர். முதலில் களத்தில் பொறுமை காட்டிய அவர்கள், போக போக வாண வேடிக்கைகளை காட்டத் தொடங்கினர்.
இதனால் வாயடைத்துபோன இந்திய பந்துவீச்சாளர்கள், ரசிகர்கள் போலவே வில்லியம்சன் மற்றும் லாதம் ஆட்டத்தை வேடிக்கை பார்த்தனர். முடிவில் 47 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 308 ரன்கள் இலக்கை எட்டி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, வாஷிங்டன் சுந்தரை தவிர அனைவரும் பெரும் வள்ளல்களாகவே மாறிவிட்டனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 104 பந்துகளில் லாதம் 145 ரன்களும், வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ