இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் 2வது நாள்: உணவு இடைவேளை ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 50 ரன்கள் இருக்கும் போது ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷேன் மார்ஷை (2) அஸ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக விளையாடி 244 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 104 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பிறகு வந்த மேத்யூ வேட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். கேப்டன் ஸ்மித்(153) உடன் ஸ்டீவ் ஓ கீபே(1) இணைந்து விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய 7 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டீவ் ஓ கீபே 1 ரன்னும், ஸ்மித் 153 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இந்திய சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
That's lunch on Day 2 of the 3rd @Paytm Test. Australia are 401/7 (Smith 153*, Maxwell 104). Follow the game here - https://t.co/d3NMQQCro5 pic.twitter.com/Z64rrNZVKQ
— BCCI (@BCCI) March 17, 2017