கருத்தாக பேசிய ஹர்ஷா போக்ளே... கடுப்பாகி வெளியேறிய பீட்டர்சன் - வர்ணனையில் நடந்தது என்ன?

IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் வர்ணனையின்போது, ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை தடை செய்ய வேண்டும் என ஹர்ஷா போக்ளே கூறியதை அடுத்து, அங்கிருந்து கெவின் பீட்டர்சன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2024, 06:44 AM IST
  • ஸ்விட்ச் ஹிட் பந்துவீச்சாளர்களுக்கு செய்யப்படும் அநீதி - ஹர்ஷா போக்ளே
  • திராபையான கருத்தை பேசுகிறீர்கள்... - கெவின் பீட்டர்சன்
  • இங்கிலாந்து அணி சற்று வலுவான நிலையில் உள்ளது.
கருத்தாக பேசிய ஹர்ஷா போக்ளே... கடுப்பாகி வெளியேறிய பீட்டர்சன் - வர்ணனையில் நடந்தது என்ன? title=

Harsha Bhogle vs Kevin Peterson: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி (IND vs ENG 1st Test) ஹைதராபாத் நகரில் கடந்த ஜன. 25 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் 'பாஸ்பால்' அணுகுமுறை இந்தியாவில் கைக்கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த தொடர் தொடங்கியது.

சுணக்கம் காட்டிய இந்தியா 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி (Team England) 246 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஸ்டோக்ஸ் 70 ரன்களை எடுத்தார். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து, இந்தியா முதல் நாள் மாலை முதல் மூன்றாவது நாளான நேற்று காலை வரை பேட்டிங் செய்து, 436 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. குறிப்பாக, 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்திய அணி (Team India) தரப்பில் ஜடேஜா 87, கேஎல் ராகுல் 86, ஜெய்ஸவால் 80 ரன்களை சேர்த்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்ச்சயமளித்தார். இங்கிலாந்து நேற்றைய முதல் செஷனில் இருந்து பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ஜாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி அதிரடியாகவே விளையாடியது. வேகப்பந்துவீச்சை மட்டுமின்றி சுழற்பந்துவீச்சையும் அடித்து நொறுக்கினார்கள். 

மேலும் படிக்க |  ரோகித் செய்த தவறு.. பென் டக்கெட் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடிய பும்ரா

இங்கிலாந்து கையில் எடுத்த ஆயுதம்

அவர்கள் அஸ்வின், அக்சர், ஜடேஜா ஆகியோருக்கு எதிராக ஸ்வீப் ஷாட்களை ஆயுதங்களாக கையில் எடுத்தார்கள். குறிப்பாக, ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை பென் டக்கெட் பலமுறை ஆடி பவுண்டரிகளை பெற்றார். ஜாக் கிராலி 31 ரன்களில் முதல் செஷனிலேயே ரவிசந்திரன் அஸ்வினிடம் (Ravichandran Ashwin) விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து, ஒல்லி போப் உடன் டக்கெட் ஜோடி சேர, இரண்டாவது செஷனில் பும்ரா புயலாக வந்தார். 

ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) பந்துவீச்சில் டக்கெட் 47, ரூட் 2 என அவரின் அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் திரும்பினர். பேர்ஸ்டோவ் இம்முறை 10 ரன்களில் ஜடேஜாவிடம் வீழ்ந்தார். கடைசி வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்டோக்ஸை, அஸ்வின் கிளீன் போல்டாக்கினார். 

இரண்டாவது செஷனில் இந்தியா நல்ல கம்பேக் கொடுத்தாலும், போட்டி என்னவோ, ஓல்லி போப் (Ollie Pope) கையில்தான் இருந்தது. ஓப்பனர்கள் ஸ்வீப் ஷாட்டை அதிகம் விளையாடினால், இவர் ஸ்கூப் ஷாட், ஸ்விட்ச் ஹிட் போன்ற ஷாட்களை விளையாடி ஸ்பின்னர்களின் லைன் மற்றும் லெந்தை தடுமாற வைத்தார்.

மேலும் படிக்க | பாண்டியா இல்லை, இவரு தான் உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர் - கவாஸ்கர்

வலுவான நிலையில் இங்கிலாந்து

சதம் கடந்த பின்னர்தான் போப் அவரின் அதிரடி ஷாட்களை இன்னும் வீரியத்துடன் அடிக்கத் தொடங்கினார். அஸ்வினின் பந்து ஒன்றை நேராக, கீப்பர் மற்றும் அவரின் தலைக்கு மேல் நேராக பின்புறம் அடித்த அந்த ஸ்கூப் ஷாட் பலராலும் மறக்கவே முடியாது. இங்கிலாந்து அணி மூன்றாம் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 316 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

போப் 148 ரன்களுடனும், ரெஹேன் அகமது 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். குறிப்பாக, 126 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.

வர்ணனையில் இருந்து வெளியேறிய பீட்டர்சன்

களத்தில் அனல் பறந்தது போன்று, தொலைக்காட்சி வர்ணனை செய்யும் இடத்திலும் நேற்று அனல் தெறிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஆங்கில வர்ணனையில், பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே (Harsha Bhogle) மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் (Kevin Peterson) ஆகியோர் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். அதில், கெவின் பீட்டர்சனின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

ஸ்விட்ச் ஹிட் ஒரு அநீதி

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து அணி நேற்று கையிலெடுத்த பெரிய ஆயுதம் ஸ்விட்ச் ஹிட். உதாரணத்திற்கு, வலது கை பேட்டிங் என கார்டு சொல்லி நிற்கும் பேட்டர், பந்துவீச்சாளர் பந்துவீசும் ரன்அப்பின்போது சட்டனே இடது கை பேட்டரின் நிலையில் இருந்து அந்த ஷாட்டை அடிப்பார். எனவே, இது பந்துவீச்சாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதி என ஹர்ஷா போக்ளேவும், இந்த ஷாட்டுக்கு ஆதரவாக பீட்டர்சனும் நேற்று சற்றே பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்கள் இந்த ஸ்விட்ச் ஹிட் கலாச்சாரம் குறித்து சாடியுள்ளனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | சுப்மான் கில் இப்படியா அவுட்டாவது?வெளுத்து வாங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

திராபையான பேச்சு

நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதி செஷனின் போது இந்த சம்பவம் நடந்தது. வர்ணனையின்போது, பேசிய ஹர்ஷா போக்ளே, ஸ்விட்ச் ஹிட் பந்துவீச்சாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதி என்றும், அதன் விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, இந்த ஷாட்டை தடை செய்ய வேண்டும் எனவும் பேசினார். இதற்கு பதிலளிக்காத பீட்டர்சன், உடனே வர்ணனையில் இருந்து வெளியேறினார். 

இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர் ஒருவர் X தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஹர்ஷா போக்ளேவிடம் பீட்டர்சன் தெரிவித்து குறித்து குறிப்பிட்டிருந்தார். "மணி உள்ளூர் நேரப்படி 3.25 மணியாகிறது. உங்களின் திராபையான பேச்சால் நான் கீழே செல்கிறேன்" என பீட்டர்சன் ஹர்ஷாவிடம் கூறிவிட்டு, வர்ணனையில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் கமெண்ட் செய்த பீட்டர்சன்,"ஆம், அவர் அப்படிதான் பேசினார்" என பதலளித்துள்ளார்.

விவாதம் தொடரட்டும்

இதில் ஹர்ஷா போக்ளே,"முழுமையான முட்டாள்தனம்! நீங்கள் ஹிட் மாற விரும்பினால் ஒரு பந்து வீச்சாளர் இரு கைகளாலும் பந்து வீச அனுமதிக்க வேண்டும். ஒன்று கடினமாக இருப்பதால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பந்து வீச்சாளர் இடது கையால் பந்து வீச விரும்பினால் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும், பேட்ஸ்மேனுக்கும் அதே நிபந்தனை இருக்க வேண்டும். விவாதம் தொடரட்டும்" என மேலும் கருத்து தெரிவித்துள்ளார். 

அதாவது, பேட்டர் மட்டும் நடுவரிடம் சொல்லாமல் தங்களின் நிலையை மாற்றிக்கொள்ள முடியுமானால், பந்துவீச்சாளரும் யாரிடமும் சொல்லாமல் தங்கள் இடது கையிலோ, வலது கையிலோ வீசலாம் என்ற விதி வர வேண்டும் என்பதே ஹர்ஷா போக்ளே, அஸ்வின் போன்றோரின் கோரிக்கையாக உள்ளது. 

மேலும் படிக்க |  252 ஆண்டுகளில் முதல்முறை! இந்தியா பேட்டர் செய்த வரலாற்று சாதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News