ஒடிசா மாநிலத்தை துவம்சம் செய்த போனி புயலின் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது!
வங்க கடலில் உருவான போனி புயல் சூறாவளியாக மாறி கடந்த வெள்ளி அன்று காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. அதில், பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒருலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்ற உதவிகளை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில், விமானம், தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின்விநியோகம் போன்ற சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே, போனி புயலின் தாக்கத்துக்கு 43 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது போனி புயல் தாக்கத்துக்கு மேலும் 21 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது போனி புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 64-ஆக அதிகரித்துள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும் எனவும், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த 3 தினங்களுக்குள் நிவாரண பொருள்களை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.