"என் கையில் என் தந்தையின் உயிர் போனது, அத்தருணத்தை என்னால் மறக்க இயலாது" என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமாக தெரிவித்துள்ளார்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து, National Geographic சேனலில் ஆவணப்படம் ஒன்று ஒளிப்பரப்பாகவுள்ளது. இன்று இரவு 9 மணியளவில் ஒளிப்பரப்பாகும் எந்த தொகுப்பு குறித்து National Geographic சேனல் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கோலி தனது தனிப்பட்ட வாழ்வினை குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்த தொகுப்பில் இவர் பகிர்ந்துள்ளதாவது...
"கடந்த 2006-ம் ஆண்டு நான் டெல்லி ரஞ்சி அணியில் இணைந்து விளையாடிய நேரத்தில் என் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுத் துடித்தார். அது நடுஇரவு நேரம், வலியால் துடித்த என் தந்தையை தாங்கி பிடித்தேன்.. பின்னர் அவரை என் அம்மாவிடம் விட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்கார்களை உதவிக்கு அழைத்தேன், டாக்டருக்கு போன்செய்தேன், ஆம்புலன்ஸ்சுக்கும் போன் செய்தேன். ஆனால், அது இரவு நேரம் என்பதால், ஒருவர் கூட எழுந்து வரவில்லை. ஆனால், அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாக என்தந்தையின் உயிரும் என் கையிலேயே பிரிந்தது. இந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது, நான் கண்ணீர் விட்டு கதறிய நேரமது. இத்தருணத்தில் இருந்து எனக்குள் தன்னம்பிக்கை அதிகரித்தது. கிரிக்கெட் மீதான பார்வை கூர்மையடையத் தொடங்கியது. என்னுடைய கனவுகளையும், என் தந்தையின் கனவுகளையும் நனவாக்க என்ன செய்யவேண்டுமோ அதற்காக நான் கடுமையாக உழைத்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முழுநிகழ்ச்சி National Geographic சேனலில் இன்று இரவு 9 மணியளவில் ஒளிப்பரப்பாகிறது!