அப்பன் குதிருக்குள் இல்லை என்ற வகையில் இயங்கிவரும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
அதைக்குறித்து அந்த கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
ஆளுநரைத் திரும்பப் பெற்று, முறையான விசாரணைக்கு உத்தரவிடுக!
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி தனது மாணவியரிடம் பாலியல் வற்புறுத்தல் நோக்கில் பேசிய ஒலிக்கோப்பு வெளிவந்துள்ள நிலையில், ஆளுநர் உள்ளிட்டு உயர் கல்வித்துறை உயரதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ஆளுநர் மீதே குற்றச்சாட்டு எழும்பி, அவர் மீதே விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், இப்பிரச்சனையில் அவரே முந்திக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, உண்மைக் குற்றவாளிகள் மறைந்து கொள்ளவே உதவிடும். எனவே, பொருத்தமற்ற அந்த விசாரணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
அப்பன் குதிருக்குள் இல்லை என்ற வகையில் இயங்கிவரும் ஆளுநரை திரும்பப் பெறுவதுடன், இவை குறித்து உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறக்கூடிய விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.