கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 63 வயதான கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலாமானார். தற்போது மாலை நான்கு மணி வரை மனோகர் பாரிக்கர் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலா அகாடமியில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படும். மனோகர் பாரிக்கரின் மறைவை ஒட்டி இன்று ஒருநாள் தேசிய துக்கமும், கோவா மாநிலத்தில் 7 நாட்கள் துக்கமும் அனுசரிக்கப்படுகிறது.
அவரது வரது மறைவுக்கு பலர் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக மூத்த தலைவர்கள் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க கோவா சென்றுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாகவே கோவா அரசியலில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. சமீபத்தில் பாஜக எம்எல்.ஏ. பிரான்ஸிஸ் டி சோசா மரணம் அடைந்தார். இவரது மறைவையடுத்து பாஜக-வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. தற்போது கோவா முதல்வர் மரணமடைந்துள்ளதால், கோவாவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை, தங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது காங்கிரஸ்.
இதற்கிடையில், கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே ஒரு கருத்தை இல்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுக்குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ, மத்திய அமைச்சர் மற்றும் மூத்த பா.ஜ.க. மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் படி பாஜக மூத்த தலைவரும், சட்டமன்ற சபாநாயகருமான பிரமோத் சாவந்த் கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள மற்ற கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.-க்கள் தங்களை முதலமைச்சராக ஆக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலமானதை அடுத்து 4 இடங்கள் காலியாக உள்ளது. கடந்த ஆண்டு இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்தனர். சமீபத்தில் பாஜக எம்எல்.ஏ. பிரான்ஸிஸ் டி சோசா மரணம் அடைந்தார்.