கடந்த 1971-ம் ஆண்டு நடந்ததை தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் நினைத்து பார்க்க வேண்டும் என பாஜக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:-
நமது அண்டை நாடு அமைதியில்லாமல் உள்ளது. அந்த நாடு தனது அண்டை நாடுகளையும் அமைதியாக இருக்க விட மறுக்கிறது. ஆனால், அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னயாகுமரி வரை அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர். நமக்கு வரும் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரின் ஒரு இஞ்ச் இடத்தை கூட வேறு யாரையும் எடுத்து செல்ல விட மாட்டோம்.
இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு, வன்முறையை வெறுக்கும் நாடு. அண்டை நாடுகளுடன் நல்லுறவையே வைத்து கொள்ள விரும்புகிறோம். அதனை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதத்திற்கு உதவுவதும், ஆதரிப்பதும் எந்த பலனையும் தராது. கடந்த 1971-ம ஆண்டு என்ன நடந்தது என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.