இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் புழங்கும் முக்கிய சமூக வலைதளங்களில் ஒன்றாக மாறியுள்ளது யூடியூப். பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல் தனிநபர் வருமானம் ஈட்டும் இடமாகவும் உள்ளதால் ஆதார் அட்டைகளை போல் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல்களும் உள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் இன்றி நமது திறமைகளை வளர்க்க உதவும் வீடியோக்கள் அதிகம் கிடைக்கும் இடமாகவும் யூடியூப் விளங்குகிறது. குறிப்பாக குண்டூசி தயாரிப்பு முதல் ராக்கெட் தொழில்நுட்பம் வரை பயனர்களுக்கு இலவசமாக பார்க்க கிடைக்கிறது. இதனை ஆக்கப்பூர்வமாக கொண்டு பலர் பயன்பெற்றாலும், ஆர்வக்கோளாரில் எதையேனும் செய்து சிலர் சிக்கலில் சிக்கிவிடுவதும் உண்டு.
இந்த வரிசையில் தான் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த நபர் ஒருவர் போலீஸில் சிக்கியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ரன்வீர். 45 வயதாகும் இவர் 10-வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர். இவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கமலேஷ் என்பவரிடம் குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றதாகவும், அதனை திருப்பிக்கேட்ட போது ரன்வீருக்கும் - கமலேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் கமலேஷை கொல்ல திட்டமிட்டவர் யதார்த்தமாக யூடியூபில் வெடிகுண்டு தயாரிக்கப்படுவதை பார்த்து அதேபோன்று நினைத்துள்ளார். இதற்கு தேவைப்படும் பொருட்களை வீட்டின் அருகில் உள்ள மார்க்கெடில் வாங்கி வந்து பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு எலெக்ட்ரானிக் வெடிகுண்டை தயாரிக்கும் வித்தையை கற்றுள்ளார். மேலும், பலமுறை வயல்வெளியில் குண்டை வெடிக்க வைத்தும் அவர் பரிசோதித்துள்ளார்.
சோதனை முயற்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு இறுதியாக கமலேஷின் வீட்டு கதவில் ட்ரிக்கருடன் கூடிய தான் தயாரித்த வெடிகுண்டை பொறுத்தியுள்ளார் ரன்வீர். சினிமாவில் கதவை திறந்தால் குண்டு வெடிப்பது போல் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கமலேஷூக்கு பதில் அவரது 17 வயது மகன் கவுதம் சிங் கதவை திறந்ததால் குண்டு வெடித்து அவரது முகம், கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் ரன்வீர் சிங்கை கைது செய்து செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வெடிகுண்டை தானே செய்ததாக கூறியதை ஏற்காத போலீஸார் அவருக்கு அது எங்கிருந்து கிடைத்தது என்பதை துருவி துருவி விசாரித்தனர். ஆனால் சொன்னத்தையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்ததால் தங்கள் கண்முன்னே அதனை தயாரிக்குமாறு போலீசார் கூறினர். மேலும் அதற்கு தேவையான பொருட்களையும் ரன்வீரிடம் கொடுத்த போலீஸாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. நாட்டு வெடிகுண்டை போல் சாதாரணமாக அல்லாமல் பல தொழில்நுட்பங்களை கொண்ட எலெக்ட்ரிக் வெடிகுண்டை ரன்வீர் அசால்டாக தயாரித்ததை கண்டு உத்தரப்பிரதேச போலீசார் மிரண்டு போனார்கள்.
இதைத்தொடர்ந்து ரன்வீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் யூடியூப் நிறுவனத்தையும் தொடர்புகொண்டு இதுபோன்ற ஆபத்துகளை விளைவிக்கும் தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் வீடியோக்களை உடனடியாக யுடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத நபர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR