தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.....
தூத்துக்குடி மாவட்ட மக்களின் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஆனால், வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையினை மீண்டும் திறக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியதில் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்காததால் வேதாந்தா நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏன் இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், நிர்வாக மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தான் ஆலை திறக்கப்படுகிறது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.