Vengaivayal Latest News Updates: கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்த சம்பவம் நடந்து சுமார் 25 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போதுதான் இந்த சம்பவம் குறித்த விசாரணை நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேங்கை வயல் வழக்கு: தமிழக அரசின் வாதம்
விசாரணை முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடியினர் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வேங்கை வயல் நீர்தேக்கத்தில் மலம் கலந்த வழக்கில் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றத்தை செய்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றசெயலில் ஈடுபட்டதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு நேற்று உத்தரவிட்டிருந்தது.
மேலும் படிக்க | ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!
வேங்கை வயல் வழக்கு: திருமாவளவன் முன்வைக்கும் கோரிக்கை
இந்நிலையில், வேங்கை வயல் வழக்கு காவல்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி சார்பில் இன்று (நேற்று - ஜன. 24) பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த ஜன. 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வேங்கை வயல் வழக்கு: விசாரணையில் மெத்தனம்
பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 2023ஆம் ஆண்டு ஜன.14 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது.
வேங்கை வயல் வழக்கு: குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது
உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற சந்தேகத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தற்போது ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நீர்தேக்க குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த குற்றவாளிகளான சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ