குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வெற்றி. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் 48 வயதுடைய குல்பூஷண் ஜாதவ் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2017 மே 18 ஆம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதே வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், இருதரப்பு வாதங்களை கேட்டு வந்தனர். இந்தநிலையில், இன்று இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷணுக்கு உரிமை உண்டு. பாகிஸ்தான் அரசு குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதேவேளையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனைக்கு தடை விதிக்கிறோம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.