குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் மற்றும் உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017, ஏப்ரல் மாதம் மரண தண்டனை வழங்கியது. குல்புஷனுக்கு தூதரக ரீதியிலான உதவியை பாகிஸ்தான் மறுத்ததால், இந்தியா அதே 2017 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றம் எனப்படும் ICJ -வை ( International Court Of Justice) அணுகியது.
இது தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பொருத்தமற்ற விசாரணையையும் இந்தியா எதிர்கொண்டது. இதனையடுத்து ஐசிஜே 2017, மே 18 ஆம் தேதி வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை குல்புஷனுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. இதனிடையே வழக்கின் இறுதி தீர்ப்பு ஜூலை 17 ஆம் தேதி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐசிஜே தனது தீர்ப்பை நேற்று வழங்கியது. அதில் குல்புஷன் ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும், அதனை பாகிஸ்தான் மறு ஆய்வு செய்து, தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இது இந்தியாவிற்கு கிடைத்த 15-வது சாதகமான தீர்ப்பாகும்.
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சர்வதேச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உண்மையும், நீதியும் வெற்றி பெற்றுள்ளது. உண்மைகளை பற்றிய விரிவான ஆய்வின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதற்கு ஐசிஜேவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குல்புஷ்ன் யாதவிற்கு நீதி கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எப்போதுமே நமது அரசு ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பிற்கும், நலனுக்காக மட்டும் வேலை செய்கிறது” என்று தெரிவித்தார்.
We welcome today’s verdict in the @CIJ_ICJ. Truth and justice have prevailed. Congratulations to the ICJ for a verdict based on extensive study of facts. I am sure Kulbhushan Jadhav will get justice.
Our Government will always work for the safety and welfare of every Indian.
— Narendra Modi (@narendramodi) July 17, 2019