பணப் பரிவர்த்தனை போன்ற நிதி சார்ந்த பரிவர்த்தனையின் போது, தவறான ஆதார் எண்ணை கொடுத்தால் 10 ஆயிரம் அபராதம்!!
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண் என்னை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
சமீபத்தில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தனையின்போது, தவறான ஆதார் எண்ணை அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், மத்திய அரசு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்துவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கடந்த 4 ஆம் தேதி மக்களவையிலும், 8 ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் படி, பல்வேறு தரவுகளுக்கு ஆதார் எண்ணை பெறும் முன், அதன் உரிமையாளரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப்பட்டு, விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், ஆதார் எண்களை பயன்படுத்தி தனி நபர்களின் ரகசியகங்களை திருடுபவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்க வழிகாணும் வகையில், ஆதார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி பரிவர்த்தனையின் போது, தவறான ஆதார் எண்ணை பதிவு செய்தாலோ, அல்லது வழங்கினாலோ, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வழிவகை செய்யும், நடைமுறையை, வருகிற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல், மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பட்ஜெட் தாக்கலின் போது பான் கார்டு எண்ணுக்கு பதிலாக, ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு வருமான வரி தாக்கலின்போதும், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனையின்போதும், பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வகையில், நிதி உள்ளிட்ட பரிவர்த்தனைகளின் போதும், வருமான வரித் தாக்கலின் போதும், ஆதார் எண்ணை, தெரிந்தே, தவறாக பதிவு செய்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் எண்ணை தவறாக அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழிசெய்யும் நடைமுறையை, வருகிற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிட்டு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.