தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குலசேகரன்பட்டினம், கூடல்நகர், அமராபுரம் பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும் என அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த செயல்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஏவுதளம் அமைப்பதற்காக திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் தலையாரிகள் அப்பகுதிகளிலுள்ள நில அளவீடூகள் மற்றும் மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை நிலமதிப்பீடு பணி முடிந்தபிறகு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்கும் பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.