சமூக வலைதளத்தில் இருந்து அபிநந்தன் குறித்த வீடியோவை நீக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2019, 05:19 PM IST
சமூக வலைதளத்தில் இருந்து அபிநந்தன் குறித்த வீடியோவை நீக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு title=

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவின் வான் எல்லையில் பறந்ததால், அதனை தாக்க பின்தொடர்ந்து துரத்தி இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தினர். பின்னர் திரும்பும் வழியில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கியதால், அதில் இருந்த பயணி அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.

அபிநந்தன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மனிதநேயமின்றி நடத்தப்பட்ட காட்சி மற்றும் அபிநந்தன் குறித்த பிற சில வீடியோக்கள் சமூக வலைத்தளமான யூடூப்பில் வெளியானது. அதேபோல பாகிஸ்தானும் அபிநந்தன் குறித்த வீடியோ வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளங்களில் அபிநந்தன் குறித்த வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க வேண்டும் என யூடூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Trending News