கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமையுடன் தெரிவித்துள்ளார்!
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பில் இந்திய மரபு முறை மருத்துவம் பற்றி மருத்துவ வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்... "கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது. இரவு, பகலாகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உளமார்ந்த நன்றி; அவர்களுக்கு அரசு முழு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து அதிகம் பேர் குணமடைந்துள்ளனர்; மருத்துவர் பணிசிறக்க வாழ்த்துகள்" என்றார்.
மேலும், மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும்போது துரதிருஷ்டவசமாக கொரோனா தொற்று நோய் ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளையும் அரசே ஏற்கும். சிகிச்சை பெறும் காலம் பணிக்காலமாக கருதப்படும். அதற்கும் ஊதியம் வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இத்தொற்றால் மருத்துவ பணியாளர்கள் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மேலும், அவர்களின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தோம்.
இரவு, பகல் பாராமல் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசின் சார்பாக நன்றி. கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் முறையாக வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கும் அரசு தகுந்த உதவிகளை செய்யும்" என்றார்.
இதையடுத்து, காணொளியில் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் CN.ராஜா, கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூபாய் 50 லட்சம் தரப்படும் என அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.