டெல்லியில் தமிழக மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து நீதி விசாரணை தேவை- வைகோ

தமிழக மாணவர் சரத்பிரபுவின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. எனவே மரணம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Last Updated : Jan 17, 2018, 07:28 PM IST
டெல்லியில் தமிழக மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து நீதி விசாரணை தேவை- வைகோ title=

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

டெல்லியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி-கண்ணம்மாள் ஆகியோரது மகன் சரத்பிரபு, + 2 தேர்வில் 1187 மதிப்பெண்கள் பெற்று 2015-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார். 

பின்னர் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, டெல்லி ஷாதரா மாவட்டத்தில் தில்ஷாத் கார்டன் பகுதியில் அமைந்துள்ள யூனிவர்சிட்டி ஆப் மெடிக்கல் சைன்ஸ் கல்லூரியில் எம்.டி., பொது மருத்துவம் படித்து வந்தார். டெல்லியில் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்த சரத்பிரபு ஜனவரி 17 அன்று காலை 8.30 மணி அளவில் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

தமிழக மாணவர் சரத்பிரபுவின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஏனெனில், இதற்கு முன்பு 2016 ஜூலை மாதம் அதே திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி., பொது மருத்துவ பட்ட மேற்படிப்பில் படித்து வந்தவர் தன் அறையில் இறந்து கிடந்தார். சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து சரவணன் மரணமடைந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

டெல்லியில் தொடரும் தமிழக மாணவர்களின் மரணங்கள் சிபிஐ விசாரணை தேவை - ஸ்டாலின்

தற்போது மாணவர் சரத்பிரபுவின் மரணமும் கொலையாகத்தான் இருக்கும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இவ்வாறு மர்ம மரணம் அடையும் மாணவர்களின் மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாகும் என்பதால் அந்த நோக்கத்திற்காக மருத்துவ மேற்படிப்பு பயிலும் தமிழ் மாணவர்கள் சரவணன், சரத்பிரபு போன்றவர்களின் கொலைகள் நடக்கின்றன.

நாட்டின் தலைநகர் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களின் உயிருக்குப் பாதுகhப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. திருப்பூர் டாக்டர் சரவணன் கொல்லப்பட்டதற்கு இதுவரை நீதி கிட்டவில்லை; உண்மைகள் வெளிவரவில்லை. இந்நிலையில் இன்னொரு மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் நிகழ்ந்துள்ளதைச் சாதாரணமாகக் கருத முடியாது.

மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் டெல்லி துணைநிலை ஆளுநரும் சரத்பிரபு மரணத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க தமிழக மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News